கடலில் மீன்கள் தான் வளரும், தாமரை வராது. ஏனென்றால் இது பகுத்தறிவு கடல், சமூக நீதிக் கடல் இதில் ஒரு போதும் தாமரை மலராது என்று திராவிடர் கழகத்தலைவர் கீ. வீரமணி கூறியுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம், தனியார் திருமண மண்டபத்தில் திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டு கலந்துரையாடல் கூட்டம் மற்றும் விடுதலை நாளேட்டிற்கான திருப்பத்தூர் மாவட்ட திராவிட கழகத்தின் சார்பில் சந்தா வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. விடுதலை நாளிதழுக்கு சந்தா பணம் நிகழ்ச்சிக்காக வந்த திராவிடர் கழக தலைவர் வீரமணிக்கு அந்த அமைப்பின் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அங்கிருந்து மரியாதை செலுத்திய அதாவது கோவில்களில் துலாபாரம் எனப்படும் எடைக்கு எடை காணிக்கை வழங்குவதை போல விடுதலை நாளிதழுக்கு வீரமணியின் எடைக்கு எடை பணக்கட்டுகளை வழங்க முடிவு செய்து இருந்தனர். அதன்படி மேடை அருகே ஒரு பெரிய தராசு அமைக்கப்பட்டு ஒருபுறம் கி வீரமணி அமர வைக்கப்பட்டார். மறுபுறம் பத்து ரூபாய் இருபது ரூபாய், 50 ரூபாய் உள்ளிட்ட நோட்டு கட்டுகள் அடுத்தடுத்து அடுக்கி வைக்கப்பட்டு எடை பார்க்கப்பட்டது. எடைக்கு எடை பணம் சுமார் 20 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் எடை சமமாக இருந்தது. அந்த சந்தா தொகை திராவிடர் கழக தலைவர் வீரமணியிடம் விடுதலை நாளிதலுக்கான சந்தா தொகையாக வழங்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் கி.வீரமணி கூறியதாவது:-
தமிழகத்தை எப்படியாவது காவி மண்ணாக உருவாக்க வேண்டும் என பாஜகவினர் நினைக்கின்றார்கள். ஆனால் ஒருபோதும் இது காவி மண்ணாகவோ, கார்ப்பரேட் மண்ணாகவோ ஆகாது. அவர்களுடைய முயற்சி எப்பொழுதும் பலிக்காது. இவர் எல்லாம் மூன்று எழுத்து கொண்ட அதிகாரியாக எப்படி செயல்பட்டார் என்று வியப்பாக இருக்கிறது. தமிழகத்தில் தாமரை மலராது. தமிழகத்தில் கடல் தான் உள்ளது. கடலில் மீன்கள் தான் வளரும், தாமரை வராது. ஏனென்றால் இது பகுத்தறிவு கடல், சமூக நீதிக் கடல், இதில் ஒருபோதும் தாமரை மலராது. குளத்தில் தான் தாமரை மலரும். இங்கு கடல் தான் உள்ளது . விதை விதைக்கலாம், தூவலாம் என்று நினைக்கின்றார்கள். கூலிப்படை கிடைக்கலாம் கொள்கை படை கிடைக்காது. நீட் தேர்வை வைத்து மாணவர்களின் மருத்துவ கல்வி கனவை சிதைத்து வருகிறது. இதற்காக போராடும் ஒரே இயக்கம் திராவிட கழகம் தான் என்றார்.
தமிழகத்தில் தொடர்ந்து கஞ்சா மற்றும் போதை பொருட்கள் அதிகரித்து வருகிறது என்ற எதிர்க்கட்சி குற்றச்சாட்டு தொடர்பான கேள்விக்கு, எதிர்க்கட்சித் தலைவர் அதை சுட்டிக்காட்டி இருப்பது அவருடைய கடமை. கடந்த ஆட்சி காலத்தில் இதை எல்லாம் மூடி மறைத்து இருந்தார்கள். தற்பொழுது வெளிப்படைத்தன்மையாக வழக்கு பதிந்து கைது செய்து இருக்கிறார்கள். ஆகையால் இந்த விஷயத்தில் எதிர்க்கட்சியினர் மற்றும் மற்ற அமைப்பினர் அரசியல் செய்யக்கூடாது என்று கோரிக்கை வைப்பதாகவும் இது மாணவர்கள் மற்றும் இளைஞர்களுடைய எதிர்காலம் என்பதால் இதை அரசியல் செய்ய வேண்டாம் என கேட்டுக் கொள்வதாக கூறினார்.