30 ஆண்டுகளுக்கு முன்பு நானும் அவரும் நெருக்கமாக பழகி இருந்தால் நானே ஒரு பெண்ணை பார்த்து அவருக்கு கல்யாணம் செய்து வைத்திருப்பேன். அது இயலாமல் போய்விட்டது என, திருமாவளவன் பிறந்தநாள் விழாவில் முக ஸ்டாலின் பேசினார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவன தலைவரும், எம்பியுமான தொல் திருமாவளவன் 60 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதற்கான விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. விழாவில் தமிழ்நாடு முதல் அமைச்சர் முக ஸ்டாலின் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தொல் திருமாவளவனை பார்த்தால் 60 வயது ஆனவர் போல் தெரியவில்லை. மேடையில் ஏறினால் 20 வயது நபரை போல் சிறுத்தையாக சீறுகிறார். புலியாக உறுமுகிறார். 60 வயது என சொல்லமுடியாத அளவுக்கு தான் தோற்றமளிக்கிறார். 50 வயதானபோது 2012 பொன்விழா நடைபெற்றது. இதில் கருணாநிதி பங்கேற்று வாழ்த்தினார். இன்று 60வது பிறந்தநாளுக்கு நான் வாழ்த்த வந்திருக்கிறேன். அன்று அப்பா வாழ்த்தினார். இன்று அவரது பிள்ளையான நான் வாழ்த்துகிறேன்.
பொதுவாக பிறந்தநாள் என்று சொன்னால் பதினாறு பெற்று பெருவாழ்வு வாழ்க என்று சொல்வோம். இன்றைக்கு இருப்பது போல் 30 ஆண்டுகளுக்கு முன்பு நானும் அவரும் நெருக்கமாக பழகி இருந்தால் நானே ஒரு பெண்ணை பார்த்து அவருக்கு கல்யாணம் செய்து வைத்திருப்பேன். அது இயலாமல் போய்விட்டது. தலைவர் கருணாநிதியை சந்திக்க வரும்போதெல்லாம் பலமுறை சொல்லி இருக்கிறார். நான் பக்கத்தில் இருந்து கேட்டவன். எப்படியாவது திருமணம் செய்து வைக்க கலைஞர் முயற்சி செய்தார். திருமாவளவன் வரும்போதெல்லாம் அவரது திருமணம் குறித்த விஷயத்தை கலைஞர் முன்வைப்பார். திருமாவளவன் தலையசைத்தாலும் இதுவரை நடக்கவில்லை. கருணாநிதி சொல்லி திருமாவளவன் கேட்காத ஒரு செயல் உள்ளது என்றால் அது இதுவாக தான் இருக்கும்.
இருப்பினும் தொல் திருமாவளவன் விடுதலை சிறுத்தைகள் கட்சியையே திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த அரங்கில் மட்டும் அல்ல பல ஊர்களில் உள்ள சிறுத்தை குட்டிகள் தான் அவரது பிள்ளைகள். அந்த பிள்ளைகளுக்கு எல்லாம் நான் சொல்லிக்கொள்ள விரும்புவது என்னவென்றால் உங்களுக்கு தாயும், தந்தையுமாக இருக்க கூடிய திருமாவளவனை பத்திரமாக பாதுகாக்க வேண்டிய பொறுப்பு உங்கள் அனைவரிடமும் இருக்கிறது. திருமாவளவனுக்கு மீண்டும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
திமுகவுக்கும், பாஜகவுக்கு இடையே உறவு இல்லை. திமுகவின் கொள்கைக்கும், பாஜகவின் கொள்கைக்கும் எந்த உறவும் கிடையாது. ஆகவே திருமாவளன் கொஞ்சம் கூட கவலைப்பட வேண்டாம். எந்த காலத்திலும் எந்த சூழ்நிலையிலும் திமுகவின் கொள்கைகளை ஸ்டாலின் விட்டு கொடுக்க மாட்டான். இந்த விஷயத்தில் குறைந்தபட்ச சமரசம் கூட செய்து கொள்ள மாட்டேன். இவ்வாறு பேசினார்.