ஜூலை 11-ம் தேதி நடத்தப்பட்ட பொதுக்குழு கூட்டம் செல்லாது: சென்னை உயர்நீதிமன்றம்!

ஜூலை 11-ம் தேதி நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

சென்னையில் ஜூலை 11-ம் தேதி நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழு கூட்டத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும் அதிமுக அவைத் தலைவராக தமிழ் மகன் உசேன் நியமனம் செய்யப்பட்டது செல்லாது என அறிவிக்கக்கோரி அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் ஜெயக்குமார் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த உரிமையியல் வழக்கை விசாரித்த தனி நீதிபதி ஜெயச்சந்திரன் இன்று தீர்ப்பு வாசித்தார். அதில், ஜூலை 11-ம் தேதி கூட்டப்பட்ட பொதுக்குழு செல்லாது. எடப்பாடி பழனிசாமி, அதிமுகவில் ஜூன் 23-ம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே தொடர வேண்டும். பொதுக்குழுவை கூட்டுவது தொடர்பாக ஆணையர் ஒருவரை நியமிக்க வேண்டும். கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்று உத்தரவிட்டுள்ளார்.

நீதிமன்ற தீர்ப்பு வெளியான பிறகு சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள ஒ.பன்னீர்செல்வத்தின் இல்லம் முன்பு திரண்ட ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர். ஓபிஎஸ் வாழ்க, அம்மாவின் புகழ் ஓங்குக என்று கோஷங்களை எழுப்பி வருகின்றனர். மேலும், இது துரோகிகளுக்கு கிடைத்த தோல்வி. நியாயத்திற்கு கிடைத்த வெற்றி என்றும் தொண்டர்கள் கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.

இதனிடையே, நீதிமன்ற தீர்ப்பு மற்றும் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து எடப்பாடி பழனிசாமி ஆதரவாளரும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமாரிடம் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு என்பது இறுதியான முடிவு அல்ல என்றும், அதிமுகவின் சட்ட விதிகள் படி கூட்டப்பட்ட பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாகவே எங்களது வாதத்தை முன்வைத்தோம் என்றும் கூறினார். மேலும், எதிர் தரப்புக்கு இந்த வெற்றி என்பது தற்காலிகமானது என்று கூறிய அவர், தீர்ப்பின் முழு விபரங்கள் கிடைத்ததும் சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து மேல் முறையீடு குறித்து தீர்மானிப்போம் என்றார். எப்போது பொதுக்குழு கூட்டப்பட்டாலும் எடப்பாடி பழனிசாமிக்கு தான் மெஜாரிட்டி என்பதை அனைவக்கும் தெரியும் என்றும் ஜெயக்குமார் பதிலளித்தார்.