அழகப்பா, திருவள்ளுவர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தர்கள் நியமனம் செய்து ஆளுநர் ஆணைகளை வழங்கினார்.
தமிழ்நாடு அரசே தமிழ்நாட்டு பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்களை நியமிக்க வகை செய்யும் சட்ட மசோதா தமிழ்நாடு சட்டசபையில் கடந்த ஏப்ரல் மாதம் தாக்கல் செய்யப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. மசோதா தாக்கல் செய்யப்பட்ட பின் அவையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “தமிழ்நாடு உயர்கல்வித்துறையின் கீழ் 13 பல்கலைக்கழகங்கள் செயல்படுகின்றன. இதன் வேந்தராக ஆளுநர் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறார். இணை வேந்தராக உயர்கல்வித்துறை அமைச்சர் செயல்படுகிறார். ஆனால் பல்கலைக்கழக துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் அரசுக்கு இல்லை. உயர்கல்வியில் இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
மாநில அரசை கலந்தாலோசித்து துணை வேந்தர்களை நியமிக்கும் வழக்கம் இருந்தது. ஆனால் தற்போது மாநில அரசை கலந்தாலோசிக்காமல் நியமனம் நடக்கிறது. ஆளுநர் தனக்கு மட்டுமே உரிமை இருப்பது போல் செயல்படுகிறார். ஆளுநர் ஏதோ இது தன்னுடைய அதிகாரம் என்பது போல செயல்படுகிறார். மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு ஒன்று, தனக்கு கீழ் செயல்படும் பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தரை நியமிக்க முடியவில்லை என்பது மிகவும் தவறானது. இது பல்கலைகழக நிர்வாகத்தில் நிறைய குளறுபடிகளை ஏற்படுத்துகிறது. கூட்டாச்சி தத்துவத்திற்கே இது எதிரானது. 2007ல் நியமிக்கப்பட்ட உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பூஞ்சி தலைமையிலான ஆணையம், துணை வேந்தர் நியமன அதிகாரத்தை ஆளுநருக்கு அளிக்க கூடாது என்று பரிந்துரை செய்துள்ளது. ஆளுநரிடம் இந்த அதிகாரம் இருந்தால் அது சர்ச்சைக்கு வழி வகுக்கும். குஜராத்தில் மாநில அரசுதான் துணை வேந்தர்களை நியமிக்கிறது”
என்று முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் பேசியிருந்தார்.
இந்த நிலையில் அழகப்பா, திருவள்ளுவர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தர்கள் நியமனம் செய்து ஆளுநர் ஆணைகளை வழங்கினார். என்.சந்திரசேகர் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தராகவும், ஜி.ரவி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தராகவும், டி.ஆறுமுகம் வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக துணைவேந்தராகவும் நியமித்து ஆளுநர் ஆணைகளை வழங்கினார்.