மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜியை பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி மீண்டும் சந்தித்து பேசியிருப்பது விவாதமாகி உள்ளது.
ஜனதா கட்சி என்ற கட்சியை நடத்தி வந்த சுப்பிரமணியன் சுவாமி, 2014 லோக்சபா தேர்தலின் போது பாஜகவில் ஐக்கியமானார். 2014 லோக்சபா தேர்தலில் பாஜக வென்று மத்தியில் ஆட்சியை கைப்பற்றிய நாள் முதல் ஏதேனும் ஒரு மத்திய அமைச்சர் பதவி கிடைத்துவிடாதா? என இலவு காத்த கிளியாக தவம் கிடந்தார் சுப்பிரமணியன் சுவாமி. ஆனால் பாஜகவோ சுப்பிரமணியன் சுவாமியை மத்திய அமைச்சராக்க பாஜக விரும்பவில்லை. அவருக்கு ராஜ்யசபா எம்.பி. பதவி கொடுக்கப்பட்டது. பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினராகவும் ஆக்கப்பட்டார் சுவாமி. ஆனால் தமக்கு மத்திய அமைச்சர் தரப்படவில்லையே என்ற அதிருப்தியில் இருந்தார் சு.சுவாமி. இதனால் மத்திய அமைச்சர்கள் பலரையும் கடுமையாக விமர்சித்தார். குறிப்பாக மத்திய நிதி அமைச்சர்கள், ரிசர்வ் வங்கி ஆளுநர்கள், பொருளாதார ஆலோசகர்கள் இவர்களை டார்கெட் செய்து விமர்சனம் செய்தார் சுப்பிரமணியன் சுவாமி. இதனால் கடும் அதிருப்தி அடைந்த பாஜக மேலிடம், அவருக்கு மீண்டும் ராஜ்யசபா எம்.பி. பதவியும் தரவில்லை; அத்துடன் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் என்ற பதவியையும் பறித்துக் கொண்டது. இதனால் கொந்தளித்துப் போனார் சு.சுவாமி. இதனைத் தொடர்ந்து பாஜகவில் இருந்து கொண்டே பாஜகவை மிக கடுமையாக விமர்சித்து வருகிறார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் டெல்லியில் திடீரென பாஜகவின் பரம எதிரியான மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியை சுப்பிரமணியன் சுவாமி சந்தித்து பேசினார். அப்போதே திரிணாமுல் காங்கிரஸில் சு.சுவாமி இணையப் போகிறாரா? என்கிற கேள்வி எழுந்தது. இதற்கு பதிலளித்த சுப்பிரமணியன் சுவாமி, நான் மமதாவின் பக்தன்; எப்போதும் அவருடனேயே இருக்கிறேன் என பூடகமாக பதில் சொன்னார். இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்துக்கு மீண்டும் பயணம் மேற்கொண்டுள்ளார் சுப்பிரமணியன் சுவாமி. கொல்கத்தாவில் மமதா பானர்ஜியை சந்தித்தும் பேசினார் சுப்பிரமணியன் சுவாமி. இச்சந்திப்பு 30 நிமிடங்கள் நீடித்தது. இச்சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு இருவருமே பதிலளிக்கவில்லை.