தமிழகத்தில் மின் தடை ஏற்படாமல் தடுக்க வேண்டும்: ராமதாஸ்!

மின்சார சந்தையில் மின்சாரம் வாங்க தமிழ்நாடு மின்வாரியத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் மின் தடை ஏற்படாமல் தடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

மத்திய மின்சாரத்துறை அமைச்சகத்தின் கீழ் பவர் சிஸ்டம் ஆபரேஷன் கார்ப்பரேஷன் செயல்பட்டு வருகிறது. இதன் கீழ் செயல்படும் மின்சார உற்பத்தி நிறுவனங்கள் மூலம் மாநிலங்களில் உள்ள மின் விநியோக நிறுவனங்களுக்கு (discoms) மின்சாரம் வழங்கப்படுகிறது. இதையடுத்து டிஸ்காம்ஸ் சார்பில் மின்சார உற்பத்தி நிறுவனங்கங்களுக்கு பணம் வழங்க வேண்டும். ஆனால் தற்போது பல மாநிலங்களில் உள்ள டிஸ்காம்ஸ் சார்பில் மின்சாரத்துக்கு பணம் செலுத்தாமல் உள்ளது. குறிப்பாக தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, பீகார், ஜார்கண்ட், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், ராஜஸ்தான், மணிப்பூர் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்கள், யூனியன் பிரதேசமான ஜம்மு காஷ்மீர் மின் விநியோக நிறுவனங்கள் பாக்கி தொகை வைத்துள்ளன. இந்த 12 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசம் சார்பில் மொத்தம் ரூ.5 ஆயிரம் கோடி வரை பாக்கி வைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே புதிய லேட் பேமென்ட் சர்சார்ஜ் விதிகளின் கீழ் 7 மாதங்களுக்கும் மேல் டிஸ்காம்கள் நிலுவை தொகையை செலுத்தாமல் இருந்தால் அவை மின்சார வர்த்தகத்தில் ஈடுபடமுடியாது. இதனால் கடனாக உள்ள பாக்கி தொகை செலுத்தவில்லை என்றால் மின்வர்த்தகத்தில் தடை விதிக்க முடியும். இதன்மூலம் தமிழ்நாடு உள்பட 12 மாநிலம், யூனியன் பிரதேசமான ஜம்மு காஷ்மீரில் மின்சாரம் வர்த்தகம் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:-

மின்சார சந்தையில் வாங்கிய மின்சாரத்திற்காக மின்னுற்பத்தி நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய ரூ.926 கோடியை செலுத்தத் தவறியதால், மின்சந்தையிலிருந்து மின்சாரம் வாங்கவும், விற்கவும் தமிழ்நாடு மின்வாரியத்திற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இது பெரும் பின்னடைவு.

தமிழகத்தின் தேவையில் மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவாகவே தமிழக அரசால் உற்பத்தி செய்யப்படுகிறது. மத்திய அரசு, தனியார் நிறுவனங்களிடம் வாங்குவது தவிர, மின் சந்தையிலிருந்து மின்சாரத்தை வாங்கி தான், தமிழ்நாட்டின் மின்சாரத் தேவையை மின்வாரியம் சமாளித்து வருகிறது. தமிழகத்தில் காற்றாலை மின்னுற்பத்தி குறையத் தொடங்கியுள்ள நிலையில், மின்சார சந்தையில் மின்சாரத்தை வாங்க முடியாவிட்டால் தமிழகத்தில் கடுமையான மின்தட்டுப்பாடு ஏற்படக்கூடும். பொதுமக்களின் வாழ்க்கையை மட்டுமின்றி, தொழில் உற்பத்தி மற்றும் வணிகத்தையும் இது பாதிக்கக்கூடும். மின்னுற்பத்தி நிறுவனங்களுக்கான நிலுவையை மின்வாரியம் உடனடியாக செலுத்தி தடையை விலக்கச் செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் மின் தடை ஏற்படாமல் இருப்பதை தமிழக அரசும், மின்சார வாரியமும் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.