டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்பட 16 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு!

டெல்லி துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியா உள்ளிட்ட 16 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

டெல்லியில் முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. துணை முதல் மந்திரியாக மணீஷ் சிசோடியா உள்ளார். மணீஷ் சிசோடியா வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். மதுபான உரிமம் வழங்குவதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக பதியப்பட்ட வழக்கில் மணீஷ் சிசோடியாவின் வீடு உள்பட 21 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இந்நிலையில், டெல்லி துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியா மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளனர். புதிய மதுக்கொள்கை முறைகேடு புகாரில் டெல்லி துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியா உள்ளிட்ட 16 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் மணிஷ் சிசோடியாவுக்கு நெருக்கமானவராக அறியப்படும் நிறுவனத்திற்கு மதுபான வியாபாரி ஒருவர் ரூ.1 கோடி ரூபாய் கொடுத்துள்ளதாக சிபிஐ தனது முதல் தகவல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சி.பி.ஐ., தனது கடமையை செய்கிறது. அந்த அமைப்பை பார்த்து பயப்பட வேண்டியதில்லை என டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கூறியுள்ளார். அவர் கூறியதாவது:-

சர்வதேச அளவில் சிறந்த கல்வி அமைச்சராக, மணிஷ் சிசோடியா அறிவிக்கப்பட்டுள்ளார். ஆனால், ரெய்டு நடத்துவதற்காக அவரது வீட்டிற்கு சி.பி.ஐ., அதிகாரிகள் வந்துள்ளனர். ஏராளமான தடைகள் விதிக்கப்படுகின்றன. டெல்லியில் கல்விபுரட்சியை ஏற்படுத்தி அமெரிக்க பத்திரிகையின் முதல்பக்கத்தில் தோன்றுவது சாதாரணமான விஷயம் அல்ல. இது முதல் ரெய்டு அல்ல. கடந்த 7 ஆண்டுகளில் மணிஷ் சிசோடியா வீட்டில் ஏராளமான ரெய்டுகள் நடத்தப்பட்டன. அவருக்கு எதிராக ஏராளமான பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனது வீட்டிலும் ரெய்டு நடந்துள்ளது. சத்யேந்திர ஜெயின், கைலாஷ் கெலாட் வீட்டிலும் ரெய்டு நடந்தாலும் எதுவும் கிடைக்கவில்லை. தற்போதும் எதுவும் கிடைக்காது. சி.பி.ஐ., தனது கடமையை செய்கிறது. பயப்பட வேண்டிய அவசியமில்லை. சி.பி.ஐ., தனது கடமையை செய்ய அனுமதிக்க வேண்டும். நம்மை துன்பப்படுத்த வேண்டும் என மேலிடத்தில் இருந்து உத்தரவு வந்துள்ளது. தடைகள் வந்தாலும் நமது பணியை நிறுத்த முடியாது. இவ்வாறு கெஜ்ரிவால் கூறினார்.

இந்நிலையில் இதுகுறித்து மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியிருப்பதாவது:-

டெல்லியில் ஆம்ஆத்மி ஊழல் புகாரில் சிக்குவது புதிதல்ல, தற்போது மீண்டும் சிக்கி இருக்கிறது. சத்யேந்திர ஜெயின் சிறையில் அடைக்கப்பட்டார். இவரை இன்னும் சஸ்பெண்ட் கூட செய்யவில்லை. ஆம்ஆத்மி, கெஜ்ரிவால், சிசோடியாவின் உண்மையான முகம் மக்களுக்கு தெரிந்து விட்டது. கலால் துறையில் முறைகேடு நடந்திருப்பதற்கு கல்வி துறையில் சிறந்து விளங்கினார் என்று சம்பந்தம் இல்லாத பதிலை காரணத்தை சொல்வது கேலியாக உள்ளது. மக்களை முட்டாளாக்க வேண்டாம் . மதுபான விவகாரத்தில் பெரும் ஊழல் நடந்துள்ளது.

ஊழலை ஒழிப்போம் என்று கூறி அரசியலுக்கு வந்த ஆம்ஆத்மி கட்சியினர் இப்போது ஊழலில் சிக்கி உள்ளனர். ஊழல் இருப்பது தெரிய வந்துள்ளதால் தான் சிபிஐ விசாரணை நடக்கிறது. ஊழல் அற்றவர் என்று நிரூபிக்க எது வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் இது வரை அவர் குற்றம் புரிந்தவர் தானே! சிசோடியா “எக்சைஸ் மினிஸ்டர் அல்ல அவர் எக்ஸ்கியூஸ் மினிஸ்டர் ஆகி விட்டார். இவ்வாறு மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியுள்ளார்.