அதிமுகவில் ஓ.பன்னீர் செல்வம் மௌனமாக தொடங்கும் யுத்தம் தர்மயுத்தம் அல்ல, அது துரோக யுத்தம் என்று முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் விமர்சித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே எட்டயபுரத்தில் அதிமுக 50வது ஆண்டு பொன்விழா மற்றும் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ மற்றும் ஆர்பி உதயகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் அதிமுக கட்சியில் 50 ஆண்டு காலம் பயணித்த மூத்த உறுப்பினர்களுக்கு சான்றிதழ் மற்றும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. அதேபோல் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. இதனைத்தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் 7 முறை தனது நிலைப்பாட்டினை ஓ.பன்னீர்செல்வம் மாற்றியுள்ளார். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் ஓ.பன்னீர் செல்வம் முதல்வர் பதவி ஏற்றார். பின்னர் ராஜினாமா செய்தார். தொடர்ந்து தர்மயுத்தம் தொடங்கினார். அதன்பின் திமுகவுடன் இணைந்து சட்டமன்றத்தில் அதிமுகவிற்கு எதிராக வாக்களித்தார். பின்னர் எடப்பாடி பழனிசாமி எடுத்த முயற்சியின் காரணமாக ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இணைக்கப்பட்டு துணை முதல்வர், கட்சி ஒருங்கிணைப்பாளர் பதவியும் வழங்கப்பட்டது. இருந்த போதிலும் அவரிடம் இருந்து ஒத்துழைப்பு முழுமையாக கிடைக்கவில்லை.
முதல்வர் வேட்பாளர் யார் என்று அறிவிக்கும் போது ஓ.பி.எஸ் மௌனயுத்தம் நடத்தினார். இதனால் அதிமுக செல்வாக்கு 5 சதவிகிதம் வரை சரிந்தது. சட்டமன்ற தேர்தலின் போது தனது தொகுதியை தவிர்த்து மற்ற தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரத்திற்கு ஓ.பி.எஸ். செல்லவில்லை. எதிர்க்கட்சி தலைவர் பதவி யாருக்கு என்று வரும் போது வழக்கம் போல மௌன யுத்தம் தொடங்கினார். எந்த தியாகத்தினையும் செய்யாதவருக்கு தலைவர் பதவி எதற்கு என்று சட்டமன்ற உறுப்பினர்கள் கேட்கின்றனர். எப்போது எல்லாம் தனக்கு பதவி கிடைக்கவில்லையோ அப்போது எல்லாம் ஒரு மௌன யுத்தத்தினை தொடங்குவார். அதற்கு பெயர் தர்மயுத்தம் என்று சொல்வார். ஓபிஎஸ் மௌனமாக தொடங்கும் யுத்தம் தர்மயுத்தம் அல்ல, அது துரோக யுத்தம்.
சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், ஒட்டுமொத்த பொதுக்குழு உறுப்பினர்களும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அணிவகுத்து நிற்கின்றனர். காலாவதியானவர்கள், காணாமல் போனவர்களை அழைத்து வந்து ஓபிஎஸ் பதவிகள் வழங்கி வந்தார். நீதிமன்ற தீர்ப்பினால் அதுவும் மாறாது. எப்போது எல்லாம் தன் பதவிக்கு ஆபத்து வருகிறதோ, அப்போது எல்லாம் கட்சிக்கு ஆபத்து போன்ற மாயத்தோற்றத்தினை ஓபிஎஸ் உருவாக்குவார். அதற்காக போராடுவார், தர்மயுத்தம் நடத்துவார். அவருடைய யுத்தங்கள் தோல்வியில் தான் முடிந்துள்ளது. தவிர ஓபிஎஸ்-க்கு வெற்றியை தராது. அவர் பல வதந்திகளை உருவாக்கி வருகிறார். விலாசத்தினை தொலைத்தவர்கள் தான் ஓபிஎஸ் பக்கம் செல்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.