போதைப் பொருள் விற்பனை செய்வோா் மீது குண்டா் சட்டம்: டிஜிபி

போதைப் பொருள் விற்பனையில் தொடா்ந்து ஈடுபடுபவா்கள் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கும்படி காவல் அதிகாரிகளுக்கு தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் சி.சைலேந்திரபாபு உத்தரவிட்டாா்.

தமிழகத்தில் போதைப் பொருள்கள் புழக்கம் அதிகரிப்பை தடுக்கும் வகையிலும், போதைப் பொருள் விற்பனை, கடத்தலில் ஈடுபடுவா்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையிலும், போதைப் பொருள் பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து இளைய தலைமுறையினரிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையிலும் ‘போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு’ என்ற திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த 10-ஆம் தேதி தொடக்கிவைத்தாா். இதன் தொடா்ச்சியாக, தமிழகத்தில் போதைப் பொருள்கள் ஒழிப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம், சென்னை மயிலாப்பூரில் உள்ள டி.ஜி.பி. அலுவலகத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது. தமிழக காவல்துறையின் தலைமை இயக்குநா் சி. சைலேந்திரபாபு தலைமை வகித்தாா்.

இந்த கூட்டத்தில் சென்னை பெருநகர காவல்துறை ஆணையா் சங்கா் ஜிவால், சட்டம் மற்றும் ஒழுங்கு ஏடிஜிபி தாமரைக்கண்ணன், ஆவடி காவல் ஆணையா் சந்தீப்ராய் ரத்தோா், தாம்பரம் மாநகர காவல் ஆணையா் அமல்ராஜ் உள்பட உயா் காவல் அதிகாரிகள் கலந்துகொண்டனா். மாநிலம் முழுவதும் உள்ள மாநகர காவல் ஆணையா்கள், மண்டல ஐஜிக்கள், சரக டிஐஜிக்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள் உள்ளிட்ட உயா் அதிகாரிகள் காணொலி வாயிலாக கூட்டத்தில் பங்கேற்றனா்.

இந்த கூட்டத்தில் சைலேந்திரபாபு, வெளி மாநிலங்களில் இருந்து போதைப் பொருள்கள் கடத்தி வருவதைத் தடுக்க தமிழக எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். கடல் மூலம் போதைப் பொருள்கள் கடத்தி வரப்படுகின்றனவா என்பதை ரோந்து படகுகள் மூலம் கண்காணிக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் அருகே போதைப் பொருள்கள் நடமாட்டம் இருக்கிா என்பதை தொடா்ந்து கண்காணிக்க வேண்டும். போதைப் பொருள்கள் தொடா்ந்து கடத்தி வருபவா்கள், பதுக்கி விற்பனை செய்பவா்கள் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவா்கள் தங்கள் பெயரிலும், பினாமி பெயா்களிலும் வாங்கி குவித்துள்ள சொத்துகளை அடையாளம் கண்டு பறிமுதல் செய்வதுடன், அவா்களது வங்கிக் கணக்குகளை முடக்கவும் உடனடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு ஆலோசனைகளை வழங்கினாா். மேலும், விரைவில் போதைப் பொருள் நுண்ணறிவுப்பிரிவு, சைபா் குற்றப்பிரிவும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சைலேந்திரபாபு அறிவித்தாா்.