டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவுக்கு சிபிஐ லுக்அவுட் நோட்டீஸ்!

மதுபானக் கொள்கை விதிமீறல் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா வெளிநாடு செல்ல தடை விதித்து சிபிஐ லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்து உள்ளது.

டெல்லியில், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அமைச்சரவையில், துணை முதலமைச்சராக இருப்பவர், மணீஷ் சிசோடியா. இவர், ஆட்சியிலும், கட்சியிலும் நம்பர் 2 இடத்தில் இருப்பவர். இதற்கிடையே, டெல்லி மதுபானக் கொள்கையில் விதிமீறல் நடைபெற்றதாக, எதிர்க்கட்சியான பாஜக கடந்த சில வாரங்களாகவே குற்றம் சாட்டி வருகிறது. இந்த விவகாரம் குறித்து துணை நிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனாவிடம் முறையிட்ட பாஜக, சிபிஐ விசாரிக்க அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தது. இதை பரிசீலித்த ஆளுநர் வினய் குமார் சக்சேனா, சிபிஐ விசாரணைக்கு அனுமதி அளித்தார். இதற்கு ஆளுங்கட்சி ஆம் ஆத்மி கட்சி கடும் எதிர்ப்புத் தெரிவித்தது.

இந்நிலையில், டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில், அண்மையில், சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். சுமார் 12 மணி நேரம் நடைபெற்ற இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரெய்டு குறித்து கருத்துத் தெரிவித்த ஆம் ஆத்மி கட்சி, இதற்கெல்லாம் பயப்படுகிற கட்சி ஆம் ஆத்மி கட்சி அல்ல என்றும், சிபிஐ அதிகாரிகளை சிவப்பு கம்பளத்துடன் வரவேற்பதாக தெரிவித்தது. தொடர்ந்து, டெல்லி மதுபானக் கொள்கையில் நடந்த விதிமீறல் தொடர்பாக, சிபிஐ அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்தனர். அதில், டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா முதல் நபராக சேர்க்கப்பட்டு உள்ளார். அவரைத் தொடர்ந்து மேலும் 14 பேரின் பெயர்களும் எஃப்.ஐ.ஆரில் சேர்க்கப்பட்டு உள்ளன.

இந்நிலையில், டெல்லி மதுபானக் கொள்கை விதிமீறல் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா மற்றும் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள மேலும் 12 பேர், வெளிநாடு செல்ல தடை விதித்து, சிபிஐ அதிகாரிகள் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்து உள்ளனர். இதன் மூலம் அவர்கள் வெளிநாடு செல்ல முடியாது. அனைத்து விமான நிலையங்களுக்கும் இந்த லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. இதற்கிடையே இந்த வழக்கில், மணீஷ் சிசோடியா விரைவில் கைது செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.