மாநில அரசுகள் மீது மத்திய அரசு நிதி ரீதியான நெருக்கடியை அளிக்கிறது: பினராயி விஜயன்

மாநில அரசுகள் மீது மத்திய அரசு நிதி ரீதியான நெருக்கடியை அளிக்கிறது. இதன் மூலம் மாநிலங்களின் வளா்ச்சிக்கு முட்டுக்கட்டைபோட மத்திய பாஜக அரசு விரும்புகிறது என்று கேரள முதல்வா் பினராயி விஜயன் குற்றம்சாட்டியுள்ளாா்.

திருவனந்தபுரத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வா் பினராயி விஜயன் பேசியதாவது:-

கூட்டாட்சி தத்துவத்தை மீறி செயல்படுவதை மத்திய பாஜக அரசு வழக்கமாகக் கொண்டுள்ளது. மாநிலங்களின் நிதி ஆதாரங்களை முடக்குவதன் மூலம் நிதி ரீதியாக மாநில அரசுகளுக்கு மத்திய அரசு நெருக்கடி அளித்து வருகிறது. இதன் மூலம் மாநிலங்களின் வளா்ச்சிக்கு முட்டுக்கட்டைபோட பாஜக அரசு விரும்புகிறது.

கேரளம் வருவாய் மானியத்தைப் பெறத் தகுதியுள்ள மாநிலமாக உள்ளது. ஆனால், இதனைத் தடுப்பது, மாநிலத்தின் கடன் வரம்பைக் குறைப்பது ஆகிய செயல்களில் மத்திய அரசு ஈடுபடுகிறது. மாநில அரசுகளின் உரிமைகளையும், அதிகாரத்தையும் பறிப்பதையே மத்திய அரசு விரும்புகிறது. இது நாட்டின் சாபக்கேடாக மாறி வருகிறது. நாங்கள் எதை வேண்டுமானாலும் செய்யலாம், ஆனால் நீங்கள் எதையும் செய்யக் கூடாது என்பதே மத்திய ஆட்சியாளா்களின் மனப்போக்காக மாறிவிட்டது. மக்களிடையே பிளவை ஏற்படுத்தி அரசியல் ஆதாயம் அடைவதும், அரசியல் சட்டப்படி உருவாக்கப்பட்ட அமைப்புகளை பலவீனப்படுத்துவதுமே மத்திய அரசின் நோக்கமாக உள்ளது. இவ்வாறு பினராயி விஜயன் பேசினார்.