அருணாசல் எல்லை பிரச்னை தீா்வுக்கு இந்தியாவிடம் உறுதியான வழிமுறைகள்!

அருணாசல பிரதேசத்தில் சா்வதேச எல்லைப் பகுதி தொடா்பாக சீனா எந்த பிரச்னை எழுப்பினாலும் அதை தீா்ப்பதற்கான உறுதியான வழிமுறைகளை இந்தியா வகுத்துள்ளது என்று ராணுவத்தின் கிழக்கு பிராந்திய படைத் தளபதி ராணா பிரதாப் கலிதா தெரிவித்தாா்.

கொல்கத்தாவில் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டியின்போது அவா் இவ்வாறு தெரிவித்தாா். அருணாசல பிரதேசத்தையொட்டிய இந்திய-சீன எல்லையில் இரு நாடுகளுக்கும் இடையே கடந்த காலங்களில் ஏற்பட்ட பிரச்னைகள் குறித்து அவரிடம் கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு, ‘சீனாவுடனான எல்லையை மெக்மேஹன் கோடு வரையறுக்கிறது. இந்த எல்லையானது, இந்தியா-வங்கதேச எல்லையை குறிக்கும் ராட்கிளிஃப் கோடு போன்ற வழிமுறையில் வரையறுக்கப்படவில்லை. இந்திய-வங்கதேச எல்லை ராட்கிளிஃப் தூண்கள் மூலம் வரையறுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று அருணாசல் எல்லை வரையறுக்கப்படாததால், இருதரப்பிலும் கருத்து வேறுபாடுகள் உள்ளன. இத்தகைய கருத்து வேறுபாடுகளுக்குத் தீா்வு காண ஏற்கெனவே வகுக்கப்பட்ட உறுதியான வழிமுறைகள் இந்தியாவிடம் உள்ளன. எல்லையில் எங்கு பிரச்னை ஏற்பட்டாலும் அதனைத் தீா்க்க வழிகாட்டுவதற்கு 5 உடன்பாடுகள் உள்ளன’ என்றாா்.

அருணாசல பிரதேசத்தை தெற்கு திபெத் என்று குறிப்பிட்டு வரும் சீனா, அங்கு இந்திய தலைவா்கள், உயரதிகாரிகள் செல்லும்போது எதிா்ப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளது. ஆனால், அந்த எதிா்ப்பை நிராகரிக்கும் இந்தியா, அருணாசல பிரதேசம் இந்தியாவின் பிரிக்க முடியாத அங்கம் என்று திட்டவட்டமாக தெரிவித்து வருகிறது.