முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு செல்ல மத்திய அரசு அனுமதி!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு செல்ல மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.

அண்மையில் தலைநகர் டெல்லிக்கு சென்றிருந்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து விட்டு உடனே சென்னை திரும்பினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்தித்த தினத்தன்று, டெல்லியில் இருந்து வெளியாகும் நாளிதழ்களில் முதல் பக்கத்தில் மு.க.ஸ்டாலினும், மோடியும் ஒன்றாக நிற்கும் படத்தைப் போட்டு, ‘செஸ் ஒலிம்பியாட் போட்டியை துவக்கி வைத்ததற்கு பிரதமருக்கு நன்றி’ என விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. இது டெல்லி அரசியல் பார்வையாளர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. பாஜகவுடன் திமுக மோதல் போக்கை கடைபிடிக்கும் நிலையில், எதற்கு இந்த விளம்பரம் என அவர்கள் கேள்விகள் எழுப்பினர்.

இந்நிலையில், மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் பார்முலாவை, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடைபிடித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, மேற்கு வங்க மாநிலத்தில், முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு நெருக்கமானவர்கள் கைது செய்யப்பட்டு வரும் நிலையில், தன்னையும், தனது குடும்பத்தினரையும் தொந்தரவு செய்யக் கூடாது என, அவர், மத்திய அரசிடம் கேட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதே பார்முலாவை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் ஃபாலோ செய்து வருவதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே பிரதமர் நரேந்திர மோடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்த போது, தான் வெளிநாடு செல்ல இருப்பதாக தெரிவித்தாராம். இதற்கு தேவையான அனைத்து அனுமதிகளையும் மத்திய அரசு உடனே வழங்கி விட்டது.