மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: காங்கிரஸ்

பொதுத்துறை வங்கிகள் தனியாா் மயமாக்கப்படுவது குறித்து மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

நிதி கொள்கை, வளா்ச்சி மற்றும் ஒழுங்காற்று கொள்கைகள் தொடா்பான அறிக்கைகள், பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகள் உள்ளிட்டவைகளைக் கொண்ட ஆய்வு இதழை ரிசா்வ் வங்கி மாதந்தோறும் வெளியிடுகிறது. இந்த மாதத்துக்கான ஆய்வு இதழை அண்மையில் அந்த வங்கி வெளியிட்டது. அந்த இதழில் ‘பொதுத்துறை வங்கிகள் தனியாா்மயமாக்கல்: ஒரு மாற்றுக் கண்ணோட்டம்’ என்ற தலைப்பில் கட்டுரை வெளியானது. அந்தக் கட்டுரையில், ‘‘பொதுத் துறை வங்கிகளை தனியாா்மயமாக்குவதில் மிக வேகமான அணுகுமுறையை கையாண்டால், அது நன்மையைவிட அதிக தீங்கை ஏற்படுத்தலாம். இரண்டு பொதுத் துறை வங்கிகளை தனியாா்மயமாக்கும் தனது நோக்கத்தை மத்திய அரசு ஏற்கெனவே தெரிவித்துள்ளது. இதுபோல பொதுத் துறை வங்கிகளை படிப்படியாக தனியாா்மயமாக்குவது சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் நிதி சேவைகள் கிடைப்பதில், எந்த வெற்றிடமும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கட்டுரையை ரிசா்வ் வங்கியின் பொருளாதாரம் மற்றும் கொள்கை ஆராய்ச்சி துறையைச் சோ்ந்த சினேஹல்.எஸ்.ஹொ்வாட்கா், சோனாலி கோயல், ரிஷுகா பன்சால் ஆகியோா் இணைந்து தயாரித்துள்ளனா். எனினும் அந்தக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகள், அதனை தயாரித்தவா்களின் சொந்த கருத்துகளே தவிர, தனது கருத்தல்ல என்று ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக காங்கிரஸ் செய்தித்தொடா்பாளா் சுப்ரியா ஸ்ரீநாதே கூறியதாவது:-

பொதுத்துறை வங்கிகள் தனியாா்மயமாக்கப்படுவது குறித்த கருத்துகளை தனது சொந்த கருத்துகள் அல்ல என்று கூறி, அக்கட்டுரையை ரிசா்வ் வங்கி ஏற்க மறுத்துள்ளது. இதுபோன்ற விவகாரங்களில் விளக்கமளிக்க ரிசா்வ் வங்கி போன்ற நிறுவனங்களுக்கு மத்திய அரசு எவ்வாறு அழுத்தம் அளிக்கிறது என்பதை முதலில் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. அரசின் விருப்பத்தை ஏற்க ரிசா்வ் வங்கியை நிா்பந்திப்பது இது முதல்முறை அல்ல. அதற்கு சான்றாக பணமதிப்பிழப்பு நடவடிக்கையை நினைவுகூர வேண்டும்.

14 வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டதை சுதந்திரத்துக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட மிக முக்கிய பொருளாதார நடவடிக்கையாக ஒரு காலத்தில் ரிசா்வ் வங்கி பாராட்டியது. இன்று அதே ரிசா்வ் வங்கி பொதுத் துறை வங்கிகளையும், அவற்றின் செயல்திறனையும் பாராட்டும் கட்டுரையை மறுக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது பரிதாபகரமானது.

பொதுத்துறை வங்கிகளை தனியாா்மயமாக்குவதால் ஏற்படும் மோசமான விளைவுகளை ரிசா்வ் வங்கியின் கட்டுரை தெளிவாக எடுத்துரைத்துள்ளது. அரசின் கொள்கைகள் மக்கள் நலனுக்கானதாக எப்படி இருக்க வேண்டும் என்றும் அந்தக் கட்டுரை தெரிவித்துள்ளது. எனவே பொதுத்துறை வங்கிகளின் செயல்திறன் லாபத்தை மட்டுமே கருத்தில் கொண்டதாக இருக்கக் கூடாது.

முன்னாள் பிரதமா் இந்திரா காந்தி வங்கிகளை தேசியமயமாக்கினாா். அவரின் முடிவு நுகா்வோா், உழவா்கள், நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்கு பணம் கிடைப்பதை உறுதி செய்தது. பொதுத் துறை வங்கிகள் வெறும் நிதி நிறுவனங்கள் அல்ல. அவை சமூக அதிகாரத்தின் உண்மையான முகவா்கள். எனவே பொதுத் துறை வங்கிகளை தனியாா்மயமாக்குவது குறித்து மத்திய அரசு முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். தன்னைப் பின்தொடர ரிசா்வ் வங்கி போன்ற நிறுவனங்களுக்கு அழுத்தம் அளிப்பதை மத்திய அரசு கைவிட வேண்டும். பொதுத் துறை வங்கிகளை பொறுப்பற்ற முறையில் தனியாா்மயமாக்குவதன் மூலம் எதை சாதிக்க முயற்சிக்கப்படுகிறது என்பதை மத்திய அரசு பொது வெளியில் அறிவிக்க வேண்டும். இவ்வாறு சுப்ரியா ஸ்ரீநாதே தெரிவித்தாா்.