அருணா ஜெகதீசன் அறிக்கையில் அரசு மவுனம் காப்பது சந்தேகம்: டிடிவி தினகரன்

ஸ்டெர்லைட் போராட்டத்தில் 13 பேர் கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்டது குறித்த நீதிபதி அருணா ஜெகதீசன் அவர்களின் விசாரணை அறிக்கையை வெளியிடாமல் தி.மு.க அரசு மௌனம் காப்பது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்று அமமுக நிறுவனர் தலைவர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அம்மாவட்ட மக்கள் தன்னெழுச்சியாக கிளர்ந்து போராட்டம் நடத்தினர். கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் 22-ம் தேதி நடைபெற்ற 100-வது நாள் போராட்டத்தின் போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த விவகாரம் தேசிய அளவில் சர்ச்சையானது. அப்போது ஆண்ட அதிமுக அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது. இதன்காரணமாக, துப்பாக்கிச் சூடு தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை அரசு அமைத்தது. அதன்படி, 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9ஆம் தேதி விசாரணை ஆணையம் தனது விசாரணையை தொடங்கியது. அதற்காக, தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் முகாம் அலுவலகம் அமைக்கப்பட்டது. மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம், அரசு மருத்துவமனை, அண்ணாநகர், திரேஸ்புரம், ஸ்டெர்லைட் ஆலை குடியிருப்பு உள்ளிட்ட துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்ற இடங்களில் கள ஆய்வு நடத்தப்பட்டது. அதேபோல, சம்பவத்தை நேரடியாகப் பார்த்த சாட்சியங்களை முகாம் அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது.

அதேபோல, சம்பவத்தில் தொடர்புடைய 1,426 பேருக்குச் சம்மன் அனுப்பப்பட்டு, அதில் 1,048 பேர் நேரிலும், மீதமுள்ளவர்கள் ஆவணங்கள் சமர்பித்தும் விளக்கமளித்தனர். மேலும், துப்பாக்கிச்சூடு சம்பவத்தின்போது மாவட்ட ஆட்சியராக இருந்த வெங்கடேஷ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேந்திரன் அப்போதைய தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், காவல் துறை இயக்குநர் உள்ளிட்டோரிடம் நேரில் விசாரணை நடத்தப்பட்டது. கடந்த மூன்று ஆண்டுகளில் 36 கட்ட விசாரணை செய்யப்பட்டு சுமார் 3000 பக்கங்களைக் கொண்ட விசாரணை அறிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் கடந்த மே 18ஆம் தேதி தாக்கல் செய்தார். ஆனால், விசாரணையில் யார் மீது தவறு என்பது மிக பாதுகாப்பாக வைக்கப்பட்டியிருந்தது.

போராட்டக்காரர்கள் மீது குருவியை சுடுவது போல காவல்துறையினர் சுட்டனர் என்றும் அந்த நேரத்தில் பொறுப்பு வகித்த தூத்துக்குடி மாவட்டத்தின் ஆட்சியர் வெங்கடேஷ், தென் மண்டல ஐ.ஜி சைலேஷ்குமார் யாதவ், நெல்லை சரக டி.ஐ.ஜி கபில்குமார் சரட்கார், தூத்துக்குடி எஸ்.பி., மகேந்திரன், உதவி எஸ்.பி லிங்கத் திருமாறன், மூன்று காவல் நிலையங்களின் ஆய்வாளர்கள், இரண்டு உதவி ஆய்வாளர்கள், ஒரு தலைமைக் காவலர் மற்றும் ஏழு காவலர்கள் இவர்கள்தான் கலவரத்திற்குப் பொறுப்பு என்று அருணா ஜெகதீசன் விசாரணை ஆணைய அறிக்கையில் கூறப்பட்டியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அருணா ஜெகதீசன் ஆணையத்தின் விசாரணை அறிக்கையை மக்கள் முன் வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

டிடிவி தினகரன் தனது டுவிட்டர் பக்கத்தில், “ஸ்டெர்லைட் போராட்டத்தில் 13 பேர் கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்டது குறித்த நீதிபதி அருணா ஜெகதீசன் அவர்களின் விசாரணை அறிக்கையை வெளியிடாமல் தி.மு.க அரசு மௌனம் காப்பது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் அநியாயமாக கொல்லப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமென்றால், விசாரணை அறிக்கையை முழுமையாக வெளியிடுவதுடன், அதில் குற்றம் சாட்டப்பட்டிருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தி.மு.க அரசு இதனை செய்யுமா? அல்லது வழக்கம் போல இப்பிரச்னையிலும் இரட்டை வேடம் போடப் போகிறார்களா?” என்று டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.