ஆம் ஆத்மியை இரண்டாக உடைத்தால் கேஸ் குளோஸ்: மணீஷ் சிசோடியா!

ஆம் ஆத்மி கட்சியை இரண்டாக உடைத்து கணிசமான ஆதரவாளர்களுடன் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்துவிட்டால் தம் மீதான சிபிஐ, அமலாக்கப் பிரிவு வழக்குகள் அனைத்தும் கைவிடப்படும் என பேரம் பேசுவதாக மணீஷ் சிசோடியா பகீர் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதன் பின்னர் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் பஞ்சாப் மாநிலத்திலும் ஆம் ஆத்மி ஆட்சியைக் கைப்பற்றி உள்ளது. தற்போது குஜராத் சட்டசபை தேர்தலை இலக்காக கொண்டு ஆம் ஆத்மி களமிறங்கி உள்ளது. குஜராத் மாநிலத்தில் ஆளும் பாஜக அரசுக்கு எதிரான அதிருப்தி நிலை பூதாகரமாக இருப்பதாக தேர்தல் வல்லுநர்கள் கூறி வருகின்றனர். பாஜகவுக்கு மாற்றான காங்கிரஸ் கட்சி, உட்கட்சி மோதலில் சிதைந்து போயுள்ளது. இதனால் குஜராத் தேர்தல் களத்தை தங்களுக்கு சாதகமாக்க ஆம் ஆத்மி கட்சி களமிறங்கி உள்ளது. குஜராத்தில் பாஜக- ஆம் ஆத்மி இடையே கடும் மோதல் இருந்து வருகிறது.

இந்நிலையில் டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின், சட்டவிரோதப் பணப் பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா இலக்கு வைக்கப்பட்டுள்ளார். டெல்லி அரசின் மதுபான கொள்கையில் ஊழல் முறைகேடு என குற்றம்சாட்டி மணீஷ் சிசோடியா மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. மேலும் அவருக்கு சொந்தமான 21 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்நிலையில் மணீஷ் சிசோடியா வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் நேற்று செய்திகள் வெளியாகின. இதனை சிபிஐ மறுத்திருந்தது.

இந்நிலையில் மணீஷ் சிசோடியா மீது சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் தொடர்பான வழக்கை அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் பதிவு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் சத்யேந்திர ஜெயினை தொடர்ந்து மணீஷ் சிசோடியா கைது செய்யப்படலாம் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறி வருகிறார். இந்நிலையில் மணீஷ் சிசோடியா தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:-

ஆம் ஆத்மியை இரண்டாக பிளவுபடுத்தி பாஜகவில் இணைய வேண்டும் என்பது பாஜக என்னிடம் சொல்லும் செய்தி. பாஜகவுக்கான என்னுடைய பதில்: நான் ராஜபுத்திரன். மகாராஜா ராணா பிரதாப் வம்சத்தை சேர்ந்தவன். நான் என் தலையை நானே வெட்டிக் கொண்டாலும் வெட்டிக் கொள்வேனே தவிர எவர் முன்பாகவும் தலைகுனிந்து நிற்க மாட்டேன். என் மீதான அத்தனை வழக்குகளும் பொய்யானவை. உங்களால் செய்ய முடிந்ததை செய்து கொள்ளலாம். இவ்வாறு மணீஷ் சிசோடியா கூறியுள்ளார்.