அண்ணாமலை பற்றிப் பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம்: செந்தில் பாலாஜி!

முதல்வர் நிகழ்ச்சி ஏற்பாடு பணிகளைப் பார்வையிட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை பற்றிப் பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று கூறினார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி நான்கு நாட்கள் பயணமாக டெல்டா மாவட்டங்களுக்குச் செல்கிறார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்ள உள்ளார். முதல் மூன்று நாட்கள் கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் அரசு விழாக்களில் கலந்து கொள்ளும் முதல்வர் ஸ்டாலின், நான்காம் நாளில் பொள்ளாச்சியில் திமுக நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். கோவை ஈச்சனாரி பகுதியில் முதல்வர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்கான மேடை அமைக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தில் நடந்து வருகிறது.

இந்த பணிகளைப் பார்வையிட்ட பின் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது:-

தமிழக மின்சார வாரியத்தில் இருந்து ஏற்கனவே மத்திய அரசுக்கு ரூ.70 கோடி நிலுவைத் தொகை செலுத்தப்பட்டுள்ளது. முதல்வரின் அனுமதி பெற்று, மின்சார வாரியம் மூலம் மத்திய அரசுக்குக் கடிதம் எழுதப்படும். செலுத்திய தொகை சரிபார்க்கும் வசதியை போர்டலில் ஏற்படுத்த வலியுறுத்த உள்ளோம். 70 கோடி ரூபாய் மட்டுமே நிலுவையில் இருந்த நிலையில், மத்திய அரசு தடை போடுகிறது. ஆனால், மத்திய அரசு மாநிலங்களுக்குக் கொடுக்கும் பல நிலுவைத் தொகைகளை உரிய நேரத்தில் தராமல் காலம் தாழ்த்தி வருகிறது. இதையெல்லாம் நாம் எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும். இதையெல்லாம் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானதாகத் தான் பார்க்க முடிகிறது. மின்சார சட்டத்திருத்த மசோதாவை அனைவருமே எதிர்க்கிறார்கள். பாஜக ஆளும் மாநிலங்களிலும் கூட எதிர்ப்புகள் உள்ளன. மத்திய அரசு ஒரே நிலைப்பாட்டைக் கொண்டிருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து அண்ணாமலை குறித்த கேள்விக்குப் பதில் அளித்த அவர், “அண்ணாமலை சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டு இருக்கிறார். நான் கேட்ட கேள்விக்கு இதுவரை எந்த பதிலும் அவர் சொல்லவில்லை. ஊடகங்களைச் சந்தித்து எதாவது பேச வேண்டும் என்பதற்காக இப்படிப் பேசி வருகிறார். நான் கேட்ட கேள்விக்கு அவர் பதில் கொடுக்கவில்லை என்பதால் இனிமேல் அவர் பற்றி கேள்வி கேட்பதைக் தவிர்த்து விடலாம். அண்ணாமலை சொல்வதைப் புரிந்து கொள்ள வேண்டும். அப்படி இல்லையென்றால் புரிந்து கொள்ளும் பக்குவம் அல்லது தெரிந்து கொள்ளும் முயற்சி இருக்க வேண்டும். இந்த இரண்டும் இல்லையென்றால் அவர் பற்றிப் பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம்” என்று சற்று காட்டமாகவே பதில் அளித்தார்.

மேலும், சென்னை பெரும்பாக்கத்தில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மின் கட்டணம் குறித்து விளக்கி அவர், “இரண்டு வருடங்கள் அவர்கள் கட்டணம் எதையும் செலுத்தவில்லை. இப்போது நிலுவைத் தொகையைக் கட்ட முடியாது எனச் சொன்னால் அது ஏற்றுக் கொள்ளமுடியாது. கடந்த கால அரசு தான் தவறு செய்தது என்றால் அதையும் நாங்கள் தொடர முடியாது. ஆட்சிப் பொறுப்பு ஏற்ற போது, பெரும் கடனில் சிக்கித் தவித்த மின்சார வாரியத்திற்குக் கூடுதல் நிதி ஒதுக்கி, சரிவர நடத்தி வருகிறார் தமிழக முதல்வர்” என்றார்.

முதல்வரின் இந்த பயணத்தில் மாற்றுக்கட்சியைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் திமுகவில் இணையவுள்ளதாகத் தகவல் வெளியாகி வரும் நிலையில், இது தொடர்பாகப் பேசிய அவர், “பொதுக்கூட்டத்தில் பாருங்கள். யார் மேடையில் யார் இருக்கிறார். யார் கீழே யார் இருக்கிறார் என்று. அதை நீங்கள் எல்லாரும் பார்க்கத் தான் போகிறீர்கள்” என்று பதில் அளித்தார்.