திருச்சியில் விக்ரமை காண குவிந்த ரசிகர்கள்: லேசான தடியடி!

சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று காலை திருச்சி வந்தார் விக்ரம். அப்போது ஏராளமான ரசிகர்கள் திரண்டதால் லேசான தடியடி நடத்தப்பட்டது.

நடிகர் விக்ரம் நடித்துள்ள படம் கோப்ரா. ரசிகர்களால் நீண்ட காலமாக அதிகம் எதிர்பார்க்கப்படும் படமாக இருக்கும் கோப்ரா, ஆகஸ்ட் 31 ம் தேதி விநாயகர் சதுர்த்தி தினத்தன்று ரிலீஸ் செய்யப்பட உள்ளது. 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ தயாரத்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.கேஜிஎஃப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி ஹீரோயினாக நடித்துள்ள இந்த படத்தில் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி ரவி, ரோஷன் மேத்தீவ், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 2019 ம் ஆண்டு துவங்கப்பட்டு பல காரணங்களால், பல தடைகளை தாண்டி இந்த படம் ரிலீசிற்கு தயாராகி உள்ளது. இந்த படத்தின் அப்டேட் ஒவ்வொன்றும் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டி வருகிறது. கோப்ரா படத்தில் விக்ரம் அதிகபட்சமாக 20க்கும் மேற்பட்ட கெட்அப்களில் நடித்திருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த படத்திற்கு சென்சார் போர்டு யுஏ சான்று வழங்கி உள்ளதாகவும், படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 55 நிமிடங்கள் என்றும் சமீபத்தில் தகவல் வெளியிடப்பட்டது. தமிழ் உள்ளிட்ட 4 மொழிகளில் வெளியிடப்பட உள்ள கோப்ரா படத்தின் தமிழக வெளியீட்டு உரிமத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் பெற்றுள்ளது. படத்தின் பாடல்கள், போஸ்டர் உள்ளிட்டவைகள் ரசிகர்கள் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் கோப்ரா படத்தின் டிரைலர், பட ரிலீசிற்கு ஒரு வாரத்திற்கு முன், அதாவது ஆகஸ்ட் 25 ம் தேதி வெளியிடப்பட உள்ளதாக சமீபத்தில் படக்குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில் படத்தின் ப்ரொமோஷன் வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது. படத்தின் ப்ராமோஷனிற்கு விக்ரம் பல ஊர்களுக்கும் செல்ல உள்ளது தொடர்பான பிளான் லிஸ்ட் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதன்படி ஆகஸ்ட் 23 ம் தேதி மதுரை மற்றும் திருச்சியிலும், ஆகஸ்ட் 24 கோவை, ஆகஸ்ட் 25 மற்றும் 26 ல் சென்னையில் டிரைலர் ரிலீஸ் மற்றும் ப்ரொமோஷன், ஆகஸ்ட் 26 கொச்சி, ஆகஸ்ட் 27 பெங்களூரு, ஆகஸ்ட் 28 ஐதராபாத் ஆகிய இடங்களில் நடக்கும் ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் விக்ரம் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டது.

இதன்படி ப்ரொமோஷன் நிகழ்ச்சியை துவக்குவதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று காலை திருச்சி வந்தார் விக்ரம். இந்த போட்டோக்கள் சோஷியல் மீடியாவில் பரவி செம வைரலாகின. இந்த சமயத்தில் விக்ரமை பார்ப்பதற்காக அவரது ரசிகர்கள் திருச்சி விமான நிலையத்தில் கூடினர். கூட்டம் அதிகமாக இருந்ததால் ஒரு கட்டத்தில் ரசிகர்கள் முண்டியடித்து சென்றனர். இதனால் பயணிகள் வெளியே வர முடியாமல் சிரமப்பட்டனர். இதனால் மத்திய தொழிற்பாதுகாப்புப் படை போலீசார் விக்ரம் ரசிகர்கள் மீது தடியடி நடத்தி, கூட்டத்தை கலைத்தனர். இதனால் ரசிகர்கள் சிதறி ஓடியதால் விமான நிலைய பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.