சீன உளவு கப்பல் இலங்கையில் இருந்து புறப்பட்டது!

இந்திய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக விளங்கிய சீன உளவு கப்பல் இலங்கை துறைமுகத்தில் இருந்து புறப்பட்டது.

சீனாவிடம் ராணுவம் மற்றும் விண்வெளி ஆய்வுக்காக 7 உளவு கப்பல்கள் உள்ளன. அவற்றில், ‘யுவான் வாங்-5’ என்ற உளவு கப்பலும் அடங்கும். இந்த கப்பல் 222 மீட்டர் நீளமும், 26 மீட்டர் அகலமும் கொண்டது. 750 கி.மீ. வரை கண்காணிக்கும் இந்த உளவு கப்பலில் விண்வெளி ஆய்வு கருவிகள் உள்ளன. விண்வெளியில் இயங்கும் செயற்கை கோள்களையும், வானில் செலுத்தப்படும் ஏவுகணைகளையும் இந்த கப்பலால் கண்காணிகக் முடியும். இருக்கும் இடத்தில் இருந்து 750 கி.மீ. தொலைவில் உள்ள இடங்களை கண்காணிக்க முடியும். இத்தகைய நவீன உளவு கப்பலான யுவான் வாங்-5 கடந்த 16-ம் தேதி இலங்கைக்கு வந்தது. இலங்கையின் தென் பகுதியில் உள்ள அம்பாந்தோட்டா துறைமுகத்திற்கு கடந்த 16-ம் தேதி காலை 8 மணியளவில் சீன உளவு கப்பல் வந்தடைந்தது.

சீன உளவு கப்பலின் வருகைக்கு இலங்கையிடம் இந்தியா எதிர்ப்பை வெளிப்படுத்தியது. சீன உளவு கப்பலால் தென் இந்தியாவில் உள்ள ராணுவ, கடற்படை நிலையங்களுக்கும், கூடங்குளம், கல்பாக்கம் அணுமின் நிலையங்களுக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் என்று கருதிய இந்தியா உளவு கப்பலை அனுமதிக்கக்கூடாது என இலங்கையிடம் தெரிவித்தது. ஆனால், இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி சீன உளவு கப்பலை இலங்கை அனுமதித்தது. அம்பாந்தோட்டா துறைமுகத்தில் நிறுத்தப்பட்ட சீன உளவு கப்பல் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டது.

இந்நிலையில், 6 நாட்களாக இலங்கை அம்பாந்தோட்டா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த சீன உளவு கப்பல் தனது ஆய்வு பணிகளை முடித்துக்கொண்டு புறப்பட்டது. இலங்கை அம்பாந்தோட்டா துறைமுகத்தில் இருந்து மாலை 4 மணியளவில் சீன உளவு கப்பல் புறப்பட்டது என துறைமுக அதிகாரி தெரிவித்துள்ளார். இலங்கையில் இருந்து புறப்பட்ட சீன உளவு கப்பல் சீனாவின் ஜியன் ஜின் துறைமுகத்திற்கு செல்கிறது. இதன் மூலம் இந்திய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக விளங்கி வந்த சீன உளவு கப்பல் இலங்கையில் இருந்து புறப்பட்டதால் இந்திய பெருங்கடல் பகுதியில் பதற்றம் தணிந்துள்ளது.