சிவசேனாவுக்கு உரிமை கோரிய வழக்கு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்!

சிவசேனா தேர்தல் சின்னம் வழக்கில், வரும் வியாழக்கிழமை வரை எந்த உத்தரவும் பிறப்பிக்க வேண்டாம் என தேர்தல் ஆணையத்திடம் உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் ஆட்சி செய்து வந்த சிவசேனா தலைமையிலான மகா விகாஸ் அகாடி அரசுக்கு எதிராக அமைச்சராக இருந்த ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி எம்எல்ஏக்கள் ஒன்றிணைந்ததில் அரசு கவிழ்ந்தது. இதனால் முதலமைச்சர் பதவியை உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து சிவசேனா அதிருப்தித் தலைவர் ஏக்நாத் ஷிண்டே, பாஜகவுடன் கைகோர்த்து மகாராஷ்டிர மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்றினார். முதலமைச்சராக ஏக்நாத் ஷிண்டே பதவி ஏற்ற நிலையில், துணை முதலமைச்சராக, தேவேந்திர பட்னவிஸ் பதவி ஏற்றார். இதை அடுத்து, உத்தவ் தாக்கரே மற்றும் ஏக்நாத் ஷிண்டே என இரு அணிகளாக சிவசேனா கட்சி உடைந்தது. இதை அடுத்து வில் அம்பு சின்னம் தங்களுக்கு சொந்தம் என இரு அணிகளும் இந்திய தேர்தல் ஆணையத்தில் முறையிட்டு உள்ளன. எனவே இரு தரப்பினரையும், தேவையான ஆவணங்களை தாக்கல் செய்யும்படி தேர்தல் ஆணையம் கேட்டு கொண்டுள்ளது.

எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம், கட்சி தொடர்புடைய பிற தொழில்நுட்ப விவகாரங்கள், சிவசேனாவை உரிமை கோருவது தொடர்புடைய வழக்குகள், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் கிருஷ்ணா முராரி மற்றும் ஹிமா கோலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தன.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், சிவசேனாவை உரிமை கோருவது தொடர்புடைய வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டனர். மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே இடையே கட்சிக்கு உரிமை கோரும் வழக்கில் தீர்வு காண்பதற்காக 8 கேள்விகளையும் வகுத்து அந்த அமர்வுக்கு அனுப்பி வைத்து உள்ளது. இந்த வழக்கு அரசியல் சாசன அமர்வில் வரும் 25 ஆம் தேதி வியாழக்கிழமை விசாரணைக்கு வர உள்ளது.

இந்நிலையில், கட்சி சின்னம் தொடர்புடைய விவகாரத்தில், வரும் வியாழக்கிழமை வரை எந்தவொரு முடிவையும் எடுக்க வேண்டாம் என தேர்தல் ஆணையத்திடம் உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.