நம்பிக்கை துரோகம் என்பது அருவருக்கத்தக்க விஷயம். அதற்கான பலனை வரும் காலத்தில் எடப்பாடி பழனிசாமி அனுபவிப்பார் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் ஓபிஎஸ் – இபிஎஸ் இடையேயான பிரச்னைகள் உச்சத்திலேயே இருந்து வருகிறது. இதனிடையே டிடிவி தினகரன், சசிகலா ஆகியோருடன் இணைந்து செயல்பட ஓபிஎஸ் அழைப்பு விடுத்துள்ளதால், இவர்களின் சந்திப்பு எப்போது நடக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த நிலையில் தஞ்சாவூரில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
ஓபிஎஸ் கருத்தை வரவேற்கிறேன். அனைவரும் இணக்கமாக செயல்பட்டால் தான் திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற முடியும் என்ற நோக்கத்தோடு கூறியுள்ளார். அதனால் வரவேற்கிறேன். அதேநேரம், இன்னும் சில துரோக சிந்தனை உள்ளவர்கள் திருந்தினால் மட்டுமே, இந்த எண்ணம் நிறைவேறும். நாங்கள் அதிமுகவில் இணைய வேண்டும் என்றோ, அமமுகவில் இணைய வேண்டுமென்றோ ஓபிஎஸ் கூறவில்லை. அனைவரும் இணக்கமாக கைகோர்த்து செயல்பட வேண்டும் என்றுதான் கூறுகிறார். அந்த அணிக்கான தலைமை அப்போது முடிவு செய்யப்படும்.
நாடாளுமன்றத்தில் தேர்தல் குறித்து அமமுகவில் எந்த முடிவில் எடுக்கப்படவில்லை. பிரதமரை தேர்ந்தெடுக்கும் தேர்தலில், ஒரு அணிலை போல் செயல்படுவோம். காங்கிரஸ், பாஜகவோடு அரசியல் ரீதியாக எந்த பிரச்னையும் இல்லை. அந்த நேரத்தில் யாருடன் கூட்டணி என்பது முடிவு செய்யப்படும். 2023ம் ஆண்டு இறுதியில் அமமுக கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும்.
நாடு முழுவதும் இலவசம் குறித்த விவாதம் எழுந்துள்ளது. சமூக நலத் திட்டங்களுக்கும், இலசவத்திற்கு வித்தியாசம் உள்ளது. ஆனால் ஆட்சியில் அமர்வதற்காக, தேர்தல் நேரங்களில் சில இலவசங்கள் அறிவிக்கப்படுகிறது. மக்களை ஏமாற்றும் சில இலவசங்கள் கூடாது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. அதனை நானும் வரவேற்கிறேன். மக்களின் அதிக எதிர்பார்ப்புடன் திமுக ஆட்சி அமைக்கப்பட்டது. ஆனால் மக்களை ஏமாற்றும்விதமாக தான் திமுக ஆட்சி உள்ளது. அதற்கான பலனை வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் பதில் அளிப்பார்கள்.
எடப்பாடி பழனிசாமிக்கு எனக்கும் எந்த கருத்து வேறுபாடும் கிடையாது. அவருடைய குணாதியசங்கள் தான் பிரச்னை. யாரும் சிறை செல்ல வேண்டும் என்ற ஆசை எனக்கு இல்லை. ஆனால் நம்பிக்கை துரோகம் என்பது அருவருக்கத்தக்க விஷயம். அதனால் வரும் காலத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு மக்கள் தீர்ப்பு எழுதுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.