முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதுகிறார், இல்லையென்றால் குழு அமைக்கிறார், ஆனால் வளர்ச்சி திட்டங்கள் எதையும் செயல்படுத்தவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.
தொகுதியில் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாமல் உள்ள, 10 முக்கியமான கோரிக்கைகள் அடங்கிய பட்டியலை 15 நாட்களுக்குள் மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பி வையுங்கள் என அனைத்து எம்.எல்.ஏக்களுக்கும் முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதினார். இந்நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:-
முதலமைச்சர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கடிதம் எழுதினார். அதில் போதைப்பொருள் விழிப்புணர்வு கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று கூறினார். முதலமைச்சர் கையில் தான் காவல்துறை உள்ளது. முதலமைச்சர் அதிகாரிகளைக் கொண்டு, இரும்புக்கரம் கொண்டு அடக்கலாம், இதைத்தான் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார் வலியுறுத்தி வருகிறார். அதேபோல் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் இதுவரை 30 பேர் பலியாகியுள்ளனர். ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என்று தொடர்ந்து சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குரல் எழுப்பி வருகிறார். ஆனால் முதலமைச்சர் குழு அமைத்துள்ளார்.
தற்போது சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் மீண்டும் கடிதம் எழுதி உள்ளார். அதில் தொகுதிகளில் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாமல் உள்ள 10 கோரிக்கைகளை பட்டியலிட்டு, 15 நாட்களுக்குள் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கவேண்டும் என்று கூறுகிறார். எனது திருமங்கலம் தொகுதியை எடுத்துக் கொண்டால், மூன்று ஒன்றியங்கள், 116 ஊராட்சிகள், 324 வருவாய் கிராமங்கள், 1 நகராட்சி, 2 பேரூராட்சிகள் உள்ளன. ஏறத்தாழ ஒரு லட்சத்து 10 ஆயிரம் குடும்பங்கள் உள்ளது. 2 லட்சத்து 70 ஆயிரம் பேர் உள்ளனர். ஏற்கனவே இந்த தொகுதியின் நீண்ட நாள் கோரிக்கையான ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும், பேருந்து நிலையம் அமைக்க வேண்டும், திருமங்கலம் சுங்கச்சாவடியை அகற்றவேண்டும் என்று தொடர்ந்து நாங்கள் அரசை வலியுறுத்தி தான் வருகிறோம்.
தற்போது முதலமைச்சர் ஒரு தொகுதிக்கு 10 கோரிக்கை என்று கூறுகிறார். இந்த 10 கோரிக்கை என்பது ஒரு ஆண்டிற்கு மட்டுமா அல்லது ஐந்தாண்டு மட்டுமா என்பதை முதலமைச்சர் தெரிவிக்கவில்லை. ஐந்து ஆண்டுகளுக்கு சட்டமன்ற உறுப்பினர்களை செயல்பட மக்கள் அனுமதித்து உள்ளனர், அதில் பத்து கோரிக்கையை மட்டும் செய்ய முடியுமா? மக்களுக்கு நிறைய தேவைகள் உள்ளன. இந்த ஆயிரம் கோடி என்பது போதாது. எதிர்க்கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதிகளில், கடந்த ஒன்றரை ஆண்டு காலம் எந்த வளர்ச்சி திட்டங்களையும் திமுக அரசு செயல்படுத்தவில்லை. எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்களின் தொகுதியை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் திமுக அரசு அணுகுகிறது.
எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது, தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளையும் வேறுபாடு இன்றி திட்டங்கள் வகுக்கப்பட்டது. முதலமைச்சர் கடிதம் எழுதுகிறார், இல்லையென்றால் குழு அமைக்கிறார், ஆனால் வளர்ச்சி திட்டங்கள் எதையும் செயல்படுத்தவில்லை. முதலமைச்சர் உச்சவரம்பு இன்றி கோரிக்கையை நிர்ணயம் செய்ய வேண்டும். இல்லையென்றால் வளர்ச்சிக்கான வழித்தடமாக இருக்காது. முதலமைச்சர் விளம்பரப்படுத்திக் கொள்வதற்காக கடிதம் எழுதி உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.