தன்மானம் பற்றி கவலைப்படாதவர்கள் திமுக அரசை விமர்சிக்கிறார்கள்: மு.க.ஸ்டாலின்!

இனமானம், தன்மானம் பற்றி கவலைப்படாதவர்கள் தான் திமுக அரசை விமர்சிக்கிறார்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் நடைபெற உள்ள அரசு நிகழ்ச்சிகள், திமுக நிகழ்ச்சிகளில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு கோவை வந்தார். இன்று முதல் 3 நாட்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். முதல் நாளான இன்று, கோவை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஈச்சனாரியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, ஒரு லட்சத்து 7 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து, கோவையில் ரூ.663 கோடி மதிப்பிலான 768 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இதனைத்தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

இந்த விழாவை அரசு விழா என்பதைவிட கோவை மாநாடு என்பதுபோல் நடந்துகொண்டிருக்கிறது. இதன் மூலம் எதிர்கால தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பதை மக்களின் முகம் மூலம் அறிந்துகொள்கிறேன். கோவைக்கு அடிக்கடி வருவதற்கு மக்கள் மீதான அன்பே காரணம். தென்னிந்தியாவின் மிகமுக்கிய தொழில் நகரம் கோவை தான். நூற்பாலை, விசைத்தறி, கிரைண்டர் உற்பத்தி என பல்வேறு தயாரிப்புகள் கோவையில் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

கோவை பன்னாட்டு விமான நிலைய விரிவாக்க பணிகளுக்கான ரூ. 1,800 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சியில் உள்ள சாலைகளை செப்பனிட ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாட்டிலேயே அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கி, முதலீடுகளை ஈர்த்து தமிழ்நாடு வேகமாக முன்னேறி வருகிறது. மாணவர்கள், விவசாயிகள், அரசு ஊழியர்கள் என அத்தனை தரப்பு மக்களும் தமிழக அரசை பாராட்டி வருகிறார்கள். இதனை ஏற்றுக்கொள்ள முடியாமல், புரிந்துகொள்ள முடியாமல் சிலர் அளிக்கும் பேட்டிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. இனமானம், தன்மானம் பற்றி கவலைப்படாதவர்கள் தான் திமுக அரசை விமர்சிக்கிறார்கள். திமுக ஆட்சி என்பது ஒடுக்கப்பட்டவர்களுக்கு ஒளி தரும் ஆட்சி. இவ்வாறு அவர் பேசினார்.

கோவை மாவட்டம் முழுவதும் முதல்வர் வருகையையொட்டி இரண்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். இன்று கிணத்துக்கடவு ஈச்சனாரியில் நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்குச் சென்ற முதல்வர் ஸ்டாலினுக்கு கல்லூரி மாணவிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த நலத்திட்ட விழா முடிந்தபிறகு, விருந்தினர் மாளிகைக்குச் சென்று அங்கிருந்து இன்று மாலை முதல்வர் ஸ்டாலின் பொள்ளாச்சி செல்கிறார். பொள்ளாச்சியில் மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணையும் பிரமாண்ட விழா நடக்கிறது. நாளை திருப்பூரில் சிறு, குறு தொழில்நிறுவனங்களின் தொழிலுக்கு தோள்கொடுப்போம் மாநாட்டில் பங்கேற்கிறார். அதைத் தொடர்ந்து, அங்கிருந்து மதியம் 1 மணிக்கு கோபிசெட்டிப் பாளையத்துக்கு முதல்வர் புறப்பட்டுச் செல்கிறார். அங்குள்ள கள்ளிப்பட்டியில் நாளை மாலை 5 மணிக்கு நடக்கும் கட்சி விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார். பின்னர், அங்கிருந்து புறப்பட்டு ஈரோட்டுக்கு செல்லும் முதல்வர் அன்றிரவு அங்கு தங்குகிறார். 26-ஆம் தேதி ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். மீண்டும் கோவைக்கு வரும் முதல்வர் அன்று மாலை 5 மணிக்கு, பீளமேடு பிஎஸ்ஜி கல்லூரியின் பவளவிழா நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். பின்னர் முதல்வர் ஸ்டாலின் அன்று இரவு விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.