தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் உடல்நிலை நன்றாக உள்ளதாகவும், அதுகுறித்து யாரும் வதந்தி பரப்ப வேண்டாம் என்றும் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.
தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த்தின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கோயம்பேட்டில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பங்கேற்றபின் செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், பிறந்தநாளையொட்டி நாளை கட்சி அலுவலகத்திற்கு விஜயகாந்த் வருவார் என்றார். அவரை தொண்டர்கள் சந்திக்கலாம் என்றும் பிரேமலதா தெரிவித்தார். தமிழ்நாட்டில் தற்போது நடைபெறும் அனைத்து மக்கள் பிரச்சனைகளுக்கும் தேமுதிக குரல் கொடுப்பதாக பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். நிகழ்ச்சியில் 70 ஆட்டோ ஓட்டுனர்களின் குடும்பத்தினருக்கு 5 லட்சம் ரூபாய்க்கான மருத்துவ காப்பீடு உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
தேமுதிகவின் நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் 70வது பிறந்த நாள், நாளைய தினம் சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது. இதை முன்னிட்டு, சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவகத்தில், பிரேமலதா விஜயகாந்தை, மதிமுகவின் தலைமை கழக செயலாளர் துரை வைகோ நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் 56 வருட கால அரசியல் பயணம் பற்றிய, டாக்குமெண்ட் படம் வெளியிடப் போகிறார்கள். இந்த நிகழ்ச்சிக்கும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் துணை பொதுச்செயலாளர் சுதீஷ் உள்ளிட்டோரை அழைக்கவும் துரை வைகோ, வந்திருந்தார். துரை வைகோ வந்தசமயம், பிரேமலதா தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, ரத்ததான முகாம் நடந்து கொண்டிருந்தது. துணை பொதுச்செயலாளர் சுதீஷ் உள்ளிட்டோர் அந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர். அப்போது அங்கு வந்த துரைவைகோ, ஆவணப் பட வெளியீட்டுக்கு அழைப்பிதழை, பிரேமலதா, சுதீஷிடம் வழங்கினார்.
இதற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த துரை வைகோ கூறியதாவது:-
எம்ஜிஆர் போன்று வள்ளல் மனம் படைத்தவர் விஜயகாந்த். அவர் தொடர்ந்து அரசியலில் ஈடுபட வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்திடம் நான் கேட்டுக்கொண்டேன். அதோடு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்தும் தெரிவித்தேன். அரசியலை தாண்டி விஜயகாந்த் ஒரு நல்ல மனிதர். அவர் பூரண உடல் நலம் பெற்று எழுச்சியுடன் விரைவில் மக்கள் பணியாற்ற வேண்டும்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் 56 ஆண்டு கால அரசியல் வாழக்கை பற்றிய ஆவணப்படம் வெளியிடப்போகிறோம். அதற்கு அழைப்பு விடுப்பதற்காகவும் வந்தேன். அந்த டாக்குமெண்ட்ரி படம் 75 நிமிடங்கள் கொண்டது. இந்த குறும்படம் எந்த இயக்கத்தையோ அல்லது எந்த நபரையோ தாக்குவது இல்லை. முழுக்க முழுக்க வைகோவின் சாதனைகள், அவரின் அரசியல் பயணம் பற்றியது மட்டுமே அந்த குறும்படம். இந்த நிகழ்ச்சியை முதல்வர் ஸ்டாலின்தான் துவங்கி வைக்க போகிறார். இதில் அதிமுக, பாஜக தவிர்த்து அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட உள்ளது. இருந்தாலும், நாங்கள் அதிமுகவையும், பாஜகவையும் பிரித்து பார்க்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, பிரேமலதா திடீரென ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தார். விஜயகாந்த் உடல்நிலை நன்றாக உள்ளது, யாரும் வதந்தி பரப்ப வேண்டாம். அவர் கட்சி அலுவலகத்திற்கு வந்து தொண்டர்களை சந்திக்க ஆசைப்பட்டார். அதற்காக தான் அழைத்து வந்தோம். நாளையும் விஜயகாந்த் தலைமைக் கழகத்திற்கு வரப்போகிறார். தொண்டர்கள் நாளை நேரில் அவரை சந்திக்க வரலாம். உடல் நிலை பிரச்சனையால் சோர்வு தானே தவிர அவர் எங்களுக்கு அறிவுரை அளித்து வருகிறார். இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.