கார்பரேட் நிறுவனங்களுக்கு வங்கிகள் 5 லட்சம் கோடி கடன்கள் தள்ளுபடி செய்துள்ளதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
பெரு நிறுவனங்களுக்கு மத்திய அரசு சலுகைகள் அளித்து கடன்களை தள்ளுபடி செய்து வருவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடி வருகின்றன. குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம், மத்தியில் ஆளும் பாஜக அரசின் செயல்பாடுகளை அவ்வப்போது விமர்சித்து வருகிறார். அந்த வகையில், பெரு நிறுவனங்களுக்கான கடன்கள் 5 லட்சம் கோடியை வங்கிகள் தள்ளுபடி செய்து இருப்பதாக கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
இதற்கு முன்பு வங்கிகள் கார்பரேட் கடன்களை தள்ளுபடி செய்ய அச்சப்படும். ஏனென்றால், ரிசர்வ் வங்கியும் நிதி அமைச்சகமும் இது தொடர்பாக கேள்விகள் எழுப்பும் என்பதால் வங்கிகள் அச்சப்படும். ஆனால், தற்போது ஐபிசி முறையில் எந்த நடவடிக்கைக்கும் ஆளாகத வகையில், வங்கிககள் தள்ளுபடி செய்கின்றன. கடன் வழங்குபவர்கள் குழுவுடன் ஒருங்கிணைந்து, மிகப்பெரிய தொகையை தள்ளுபடி கோரும் தீர்மானத்துக்கு ஒப்புதல் அளிக்கின்றன. இந்த தீர்மான திட்டம் தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயத்தால் ஒப்புதல் வழங்கப்பட்டதும் கடன் பெற்ற கார்பரேட் நிறுவனங்கள் அனைத்து பொறுப்புகளில் இருந்து விடுவிடுக்கப்படுகிறது.
இந்த நடவடிக்கையை வங்கிகள் ‘ஹேர்கட்’ என்று சொல்கின்றன. கடன் தொகையில் 69 சதவீதம் தான் இந்த ‘ஹேர்கட்’ இருக்க வேண்டும் என்று இந்திய திவால் மற்றும் வாராக்கடன் வாரியம் 517 கேஸ்களில் குறிப்பிட்டுள்ளது. 517 கேஸ்களில் மொத்தம் ஹேர்கட் முறையில் உள்ள தொகையை கணக்கிட்டால் ரூ. 5 லட்சத்து 32 ஆயிரம் கோடி வருகிறது. இதை பழையமுறையில் சொன்னால், வங்கிகள் 517 கேஸ்களில் 5 லட்சத்து 32 ஆயிரம் கோடியை தள்ளுபடி செய்துள்ளது என்பதே இதன் அர்த்தமாகும். இதன் சரசாரி படி பார்த்தால் ஒவ்வொரு வழக்கில் ஆயிரம் கோடியாக உள்ளது. ஹேர்கட் முறையில் ஆயிரம் கோடி தொகை மதிப்பிட்டிருப்பதை இதற்கு முன்பாக கேள்விப்பட்டு இருக்கிறோமா?. இவ்வாறு டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.