ஆகஸ்ட் 29ல் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு!

ஆக.29ம் தேதி மாலை 6 மணிக்கு தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை தலைமை செயலகத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் தமிழக மக்கள் நலன் பயக்கும் புதிய திட்டங்கள் மற்றும் ஏற்கனவே உள்ள திட்டங்களின் விரிவாக்கத்திற்கு அனுமதிகள் வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள திட்டங்களுக்கு அனுமதி வழங்குவது, மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தை தொடர்வது, மின்சார கட்டணம் உயர்வு, பால் பொருட்கள் விலை உயர்வு குறித்தும் விவாதிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக கடந்த சில நாட்களாக தமிழக அளவில் பேசு பொருளாக இருக்கும் புதிய தொழிற்கொள்கை, பரந்தூர் புதிய விமான நிலைய விவகாரம், ஆன்லைன் ரம்மி தடை சட்டம் உள்ளிட்டவை விவகாரங்கள் குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதுமட்டுமல்லாமல் தமிழத்தில் உள்ள அனைத்து அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து அறிவுறுத்தல்களையும் அமைச்சரவை கூட்டத்தில் முதல்வர் வழங்கலாம் என தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. முன்னதாக ஆகஸ்ட் 30ம் தேதி அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஆகஸ்ட் 29ம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.