மக்களிடம் திமுக மன்னிப்பு கேட்கனும்: அண்ணாமலை

சென்னை-சேலம் எட்டு வழிச்சாலை திட்டம் சரியான திட்டம் என்று உணர்ந்துள்ள திமுக அரசு மக்களிடம் மன்னிப்பு கேட்கனும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

சமீபத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு எட்டு வழிச்சாலை குறித்து கருத்து தெரிவித்திருந்த நிலையில் தற்போது அண்ணாமலையின் அறிக்கை கவனிக்கதக்கதாக மாறியுள்ளது. சென்னை சேலம் எட்டு வழிச்சாலை திட்டதை திமுக எதிர்க்கவில்லையென்றும், ஆனால் விவசாயிகளிடமும் இதனால் பாதிக்கப்படும் மக்களிடமும் கலந்து பேசி இந்த திட்டத்தை அமல்படுத்தலாம் என்றுதான் கட்சி கூறியிருந்ததாகவும் அமைச்சர் வேலு சமீபத்தில் பேசியிருந்தார்.

இந்நிலையில், சேலம் சென்னை 8 வழிச்சாலை திட்டம் சரியான திட்டம் என்று இப்போது திமுக அரசு உணர்ந்துள்ளது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “எட்டு வழிச்சாலை திட்டம் சரியான திட்டம் என்று இப்போது திமுக அரசு உணர்ந்துள்ளது. எனவே இதற்காக எதிர்க்கட்சியாக இருந்த போது மக்களிடம் அவிழ்த்துவிட்ட பொய்களுக்கு மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

மேலும் பரந்தூர் விமானநிலையம் தொடர்பாக, “திமுக ஆட்சியில் கடந்த ஓராண்டாக நீர்நிலை ஆக்கிரமிப்பு என்ற பெயரில் மாற்று குடியிருப்புகள் கொடுப்பதற்கு முன்பு வீடுகள் இடிக்கப்பட்டதை பரந்தூர் வாசிகள் பார்த்திருப்பார்கள். அதனால்தான் இன்று திமு அரசு நிழலத்தை வழங்குகிறோம், இழப்பீடு கொடுக்கப்படும் என கூறும் வாக்குறுதிகள் எவற்றையும் மக்கள் நம்ப தயாராக இல்லை. தேர்தல் வாக்குறுதிகளையே நிறைவேற்றாத திமுக அரசு, பரந்தூர் மக்களுக்கு தரும் வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றுவார்கள்? என்பதை அந்த மக்கள் எப்படி நம்புவார்கள்? பரந்தூர் மக்களுக்கு தேவையான இழப்பீட்டுத் தொகை, மாற்று குடியிருப்புகளை உடனடியாக வழங்கிட வேண்டும்” என்றும், 2006ல் தந்த 2 ஏக்கர் நிலம் இலவசம் என்ற வாக்குறுதியை பரந்தூர் மக்களுக்காவது நிறைவேற்றித்தர வேண்டும் என்றும் அண்ணாமலை தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், “இனியும் அரசியல் லாபத்துக்காக மக்களை திசைதிருப்பாமல் தமிழ்நாட்டின் உண்மையான வளர்ச்சிக்காக திமுக பாடுபட வேண்டும். திருவாரூரில் ONGC-இன் எண்ணெய்க் கிணறு அமைக்கும் திட்டத்துக்கு அனுமதி தர வேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சி போராடி வருவதை முதலமைச்சரின் கனிவான கவனத்துக்கு தெரிவித்துக் கொள்கிறேன்” என்றும் தனது அறிக்கையில் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.