திமுக அரசின் சர்வாதிகார போக்குக்கு மக்கள் விரைவில் முடிவு கட்டுவார்கள்: அண்ணாமலை!

கோவை மதுக்கரை பேருந்து விவகாரத்தில் மூதாட்டிக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆதரவு தெரிவித்துள்ளார். அரசின் சர்வாதிகார போக்குக்கு மக்கள் விரைவில் முடிவு கட்டுவார்கள் என அண்ணாமலை கூறியுள்ளார்.

கோவை மதுர்க்கையில் அரசு பேருந்தில் பெண்கள் இலவசமாக பயணிக்கும் சலுகை இருந்தும்கூட ”நான் ஓசியில போக மாட்டேன்” என்று ஒரு பாட்டி கண்டக்டரிடம் வாக்குவாதம் செய்து பின்னர் காசு கொடுத்து டிக்கெட் வாங்கி பயணித்தார். அந்த வீடியோ இணையத்தில் வைரலானது. சில நாட்களுக்கு முன்பு பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பெண்கள் பயணிக்கும் இலவச பேருந்து திட்டத்தை இலவசம் என்று சொல்லாமல் ”ஓசி” என குறிப்பிட்டார். அதற்கு எதிர்வினையாற்றவே அந்த மூதாட்டி அவ்வாறு செய்தததாகவும் சொல்லப்பட்டது. மேலும்,. அதிமுகவை சேர்ந்த துளசியம்மாள் என்ற மூதாட்டியை அவ்வாறு நடிக்க வைத்து வேண்டுமென்றே வீடியோ எடுத்து பரப்பியதாக கோவையைச் சேர்ந்த சில அதிமுகக்காரர்கள் மீது திமுகவினர் குற்றசாட்டுகளை வைத்தனர்.

இந்த நிலையில், கோவை மதுக்கரையில் அரசு பேருந்தில் டிக்கெட் கேட்டு வயதான பாட்டி வாக்குவாதம் செய்த விவகாரத்தில் பாட்டி துளசியம்மாள் உட்பட 4 பேர் மீது மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ட்வீட் போட்டு திமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அண்ணாமலை அதில், “ஓசி” டிக்கெட் என்று ஏழ்மையை ஏளனம் செய்த திறனற்ற திமுக அரசுக்கு எதிராகக் குரல் கொடுத்த மூதாட்டியின் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதை தமிழக பாஜக வன்மையாகக் கண்டிக்கிறது. இந்த அறிவாலயம் அரசின் சர்வாதிகார போக்குக்கு மக்கள் விரைவில் முடிவு கட்டுவார்கள்” என இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.

அரசுப் பேருந்தில் தகராறு செய்து அவதூறு பரப்பியதாக கோவை பாட்டி, அதிமுகவினர் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. அதிமுக பிரமுகர் பிருத்விராஜ் என்பவர் வீடியோ வெளியிட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து மதுக்கரை காவல்நிலைய காவல்துறையினர் அவதூறு வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் பாட்டி மீது வழக்குப் பதிவு செய்யவில்லை எனவும் பாட்டியை தூண்டி விட்டதாக அதிமுகவினர் 3 பேர் மட்டுமே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கோவை மாவட்ட எஸ்.பி விளக்கம் அளித்துள்ளார்.