நாம் கேட்பது அதிக அதிகாரங்கள் கொண்ட மாநிலங்கள்தான்: முதல்வர் ஸ்டாலின்!

நாம் கேட்பது அதிக அதிகாரங்கள் கொண்ட மாநிலங்கள்தானே தவிர, பிரிவினை மாநிலங்கள் அல்ல என்று, முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநாடு நேற்று கட்சியின் கொடிஏற்றத்துடன் மிகப் பிரம்மாண்டத்துடன் தொடங்கியது. நேற்று தொடங்கி 4 நாட்கள் இந்த மாநாடு நடைபெறுகிறது. நிகழ்வுகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் டி.ராஜா தொடங்கி வைத்தார். மாலையில் நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டு ‘கூட்டாட்சி மற்றும் மத்திய – மாநில உறவு’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

பொதுவாக தமிழ்நாட்டில் தான் கூட்டணிக் கட்சியின் மாநாடுகள் நடந்தால் என்னை அழைப்பார்கள். ஆனால் சமீப காலமாக கேரளாவில் நடைபெறும் கூட்டணிக் கட்சி மாநாடுகளிலும் என்னை அழைப்பதை வழக்கமாக வைத்துள்ளீர்கள். நானும் தமிழ்நாட்டில் தட்டாமல் கலந்து கொள்வதைப் போல இங்கு நடந்தாலும் பங்கேற்கின்றேன். மாநில எல்லைகள் நம்மைப் பிரித்தாலும் – நாம் இந்தியா முழுமைக்கும் உருவாக்க நினைக்கும் கூட்டாட்சியானது வெல்ல வேண்டுமானால் அனைவரும் எல்லைகளை மறந்து ஒன்றாக வேண்டும் என்பதன் அடையாளமாகத்தான் நீங்கள் என்னை அழைப்பதும். நான் இங்கே வருவதும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23 ஆவது மாநாடு கண்ணூரில் நடந்த போது நான் வந்திருந்தேன். அப்போது சொன்னேன். என் பெயர் ஸ்டாலின். அதனால் நீங்கள் என்னை அழைக்காமல் இருக்க முடியாது என்று சொன்னேன். திராவிட இயக்கத்துக்கும் கம்யூனிஸ்ட் இயக்கங்களுக்குமான நட்பு என்பது இரண்டு இயக்கங்களும் தோன்றிய காலத்திலேயே உருவான நட்பாகும். சுயமரியாதை இயக்கம் கண்ட தந்தை பெரியார் அவர்கள் – சோவியத் நாட்டுக்குச் சென்று விட்டு வந்த பிறகு தான் தனது சமதர்மக் கொள்கையை வடிவமைத்தார்கள். தமிழ்நாட்டில் பொதுவுடமை இயக்கத்தின் மாபெரும் தூண்களாக போற்றப்படும் ம.வெ.சிங்காரவேலரும் – ஜீவா அவர்களும் சுயமரியாதை இயக்கத்துடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள்.

இந்தியா சுதந்திரம் அடைந்தபோது கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்ட காலக்கட்டத்தில் கம்யூனிஸ்ட் தலைவர்கள் திராவிட இயக்கத்தின் தலைவர்கள் வீட்டில் தலைமறைவாக இருந்தார்கள். திராவிட இயக்கம் உருவாகவில்லை என்றால் நான் கம்யூனிஸ்ட் கட்சியில் தான் இருந்திருப்பேன் என்று சொன்னவர் தலைவர் கலைஞர் அவர்கள். அது மனப்பூர்வமாகச் சொன்னது என்பதன் அடையாளம் தான் எனக்கு ஸ்டாலின் என்று பெயர் சூட்டியது ஆகும். நாம் வெவ்வேறு இயக்கமாக இருந்தாலும் எங்கள் கட்சிக் கொடியில் பாதி சிவப்பு நிறம் இருக்கிறது. நாம் ஒரே கொள்கைக்காரர்கள் என்பதால் தான் தமிழ்நாட்டில் மட்டுமல்ல – அகில இந்திய அளவில் கூட்டணியைத் தொடர்ந்து கொண்டு இருக்கிறோம்.

இது கேரளாவில் நடக்கக்கூடிய மாநாடாக இருந்தாலும், இந்தியா முழுமைக்கும் கூட்டாட்சி உருவாக வேண்டும் என்பதும், மாநிலத்தில் சுயாட்சி மலர வேண்டும் என்பதும், இந்தியா முழுமைக்குமான கருத்தியல். ‘இந்தியா முழுமைக்கும் கூட்டாட்சியை, மாநில சுயாட்சியை, மதச்சார்பின்மையை, சமத்துவத்தை, சகோதரத்துவத்தை, சமதர்மத்தை, சமூக நீதியை நிலைநாட்ட நாம் குரல் கொடுத்தாக வேண்டும். இந்திய அரசியலமைப்பை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது. உண்மையான, முழுமையான கூட்டாட்சி தன்மை கொண்டதாக இந்திய அரசியலமைப்பு சட்டம் திருத்தப்படுகிற வரையில் நாம் நமது முழக்கத்தையும், செயலையும் தொடர்ந்து செய்தாக வேண்டும்.

மாநில சுயாட்சியை உருவாக்குவதற்காக ராஜமன்னார் தலைமையில் குழு அமைத்து இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பை பற்றிய மறு ஆய்வுக்கு வழிகாட்டியவர் கருணாநிதி. பேரறிஞர் அண்ணா தனது இறுதி கடிதத்தில் வலியுறுத்தியது, மாநில சுயாட்சி கொள்கையைத்தான். இதனைத்தான் அண்ணாவின் உயிலாக நாங்கள் கருதி கொண்டிருக்கிறோம். தற்போது மாநில அதிகாரங்களையும், மடைமாற்றம் செய்து கொண்டு இருக்கிறார்கள். ஜி.எஸ்.டி. மூலமாக நிதி உரிமை பறிக்கப்பட்டு விட்டது. ‘நீட்’ போன்ற நுழைவுத்தேர்வுகளால் கல்வி உரிமை மறுக்கப்படுகிறது. தேசிய (புதிய) கல்விக்கொள்கை என்பது கல்வியை பல்வேறு படிநிலைகளில் தடுப்பு போட்டு மறிக்கும் கொள்கையாக உள்ளது. அதனை காவிக்கொள்கையாக, இந்திய மொழியை திணிக்கும் கொள்கையாக, இந்தி மொழியை திணிக்கும் கொள்கையாக வடிவமைக்கிறார்கள் என்பதற்காக மட்டும் எதிர்க்கவில்லை. மாநில அரசாங்கம் தனது சிந்தனை வகைப்பட்ட கல்வியை தருவதை தடுக்கிறார்கள் என்பதற்காக தடுக்கிறோம்.

கவர்னர்களின் மூலமாக இரட்டை ஆட்சி நடத்த பார்க்கிறது பா.ஜ.க. தலைமை. நமக்கான உரிமையை நிலைநாட்ட கடிதம் அனுப்பினால் அதற்கான பதில் கூட மத்திய அரசிடம் இருந்து நமக்கு வருவது இல்லை. வெறும் கையை பிசைந்து கொண்டு மாநிலங்கள் நிற்கிறது. ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே உணவு, ஒரே தேர்வு, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கலாசாரம் இப்படி எல்லாவற்றையும் ஒரே.. ஒரே.. என்று ‘கோரஸ்’ பாடுகிறார்கள். இப்படியே போனால் ஒரே கட்சி என்று ஆகிவிடும். ஒரே கட்சியானால், ஒரே ஆள் என்று ஆகிவிடும். இதை விட ஆபத்து வேறு எதுவுமே இருக்க முடியாது. இந்தியாவை காப்பாற்ற வேண்டுமானால், இந்திய ஒன்றியத்துக்குள் உள்ளடங்கிய அனைத்து மாநிலங்களையும் காப்பாற்ற வேண்டும். இந்தியாவை ஒற்றுமைப்படுத்தும் மந்திர சொற்கள்தான் கூட்டாட்சி, மாநில சுயாட்சி ஆகியவை. இவை இரண்டுக்கும் குந்தகம் ஏற்படுத்துபவர்களை இந்தியாவின் எதிரிகள் என்றுதான் சொல்ல வேண்டும்.

நாம் கேட்பது அதிக அதிகாரங்கள் கொண்ட மாநிலங்கள்தானே தவிர, பிரிவினை மாநிலங்கள் அல்ல. இந்திய அளவில் கூட்டாட்சியை ஒப்புக்கொண்டவர்களால் கேட்கப்படுவதுதான் மாநிலத்தில் சுயாட்சி. மத்திய பா.ஜ.க. அரசை தமிழ்நாடு-கேரளா மட்டுமல்ல அனைத்து மாநிலங்களும் எதிர்க்கும் காலம் நெருங்கிக்கொண்டு இருக்கிறது. தென்னகத்தில், திருவனந்தபுரத்தில் ஒலிக்கும் இந்த ஒற்றுமை குரல் – இந்தியா முழுமைக்கும் எதிரொலிக்கும் காலம் நெருங்கிகொண்டு இருக்கிறது. அந்த காலம் இந்தியா முழுமைக்குமான கூட்டாட்சியை உருவாக்கும் காலமாக அது அமையும். அனைத்து மாநிலங்களுக்குமான விடிவுகாலமாக அது அமையும். அதற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் இந்த மாநாடு அடித்தளம் அமைத்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.