மணல் கொள்ளையரால் தொடரும் உயிரிழப்புக்கு அரசுதான் பொறுப்பு: அண்ணாமலை

மணல் கொள்ளையர்கள் பறித்த குழியில் சிக்கி, தொடரும் உயிரிழப்புகளுக்கு தி.மு.க., அரசே பொறுப்பு என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

தஞ்சை அருகே கொள்ளிடம் ஆற்றில் குளிக்க சென்ற ஆறு பேர், மணல் கொள்ளையர்கள் பறித்த குழியில் மூழ்கி மாயமானதாகவும், அதில், இதுவரை மூவரின் சடலம் மீட்கப்பட்டதாகவும் வரும் செய்தி வேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு, தமிழக பா.ஜ., சார்பில் ஆழ்ந்த இரங்கல்கள்.

இது, திறனற்ற தி.மு.க., அரசின் ஒத்துழைப்போடு நடக்கும் மணல் கொள்ளையால் ஏற்பட்ட முதல் உயிர் இழப்பு இல்லை. ஜூன் மாதம் கடலுார் அருகே கெடிலம் ஆற்றில் குளிக்க சென்ற ஏழு பேர், மணல் கொள்ளையர்களால் ஏற்படுத்தப்பட்ட பள்ளத்தில் சிக்கி உயிரிழந்த சோகம் நிகழ்ந்தது. தொடர்ச்சியாக நடக்கும் இதுபோன்ற உயிரிழப்புகளுக்கு திறனற்ற தி.மு.க., அரசே பொறுப்பு. இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.