கே.சந்திரசேகர் ராவ் தொடங்கிய பாரத் ராஷ்டிர சமிதி!

தேசிய அரசியலில் தடம் பதிப்பதற்காக பாரத் ராஷ்டிர சமிதி என்ற அரசியல் கட்சியை கே.சந்திரசேகர் ராவ் தொடங்கியுள்ளார்.

தெலங்கானா மாநில முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் தனது மாநில அளவிலான அரசியல் கட்சியை மாற்றம் செய்து பாரத் ராஷ்டிரிய சமிதி என்று பெயர் சூட்டியுள்ளார். இதன்மூலம் இனி தேசிய அரசியலில் கவனம் செலுத்தப் போகிறார். வரும் 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜகவிற்கு எதிராக முக்கிய சக்தியாக பாரத் ராஷ்டிர சமிதி விளங்க வேண்டும் என்பது தான் கே.சந்திரசேகர் ராவின் எண்ணமாக உள்ளது. இதையடுத்து மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களுக்கு நட்பு ரீதியிலான பயணத்தை மேற்கொள்கிறார்.

வரும் டிசம்பர் 9ஆம் தேதி டெல்லியில் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தை நடத்தி தனது அரசியல் பிரச்சாரத்தை தொடங்கவிருப்பதாக கூறப்பட்டுள்ளது. முன்னதாக வட இந்திய மாநிலங்களை சேர்ந்த முக்கிய தலைவர்களை அழைத்து பேசி அவர்களின் ஆதரவையும் பெற்று அதன்பிறகு முறைப்படி அறிவிப்பு வெளியிடப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பாரத் ராஷ்டிரிய சமிதி கட்சியின் முதல்கட்ட இலக்கு என்பது வரும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் 4 அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் 6 சதவீத வாக்குகளை பெறுவதே ஆகும். இதற்காக குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா, டெல்லி ஆகிய மாநிலங்களில் போட்டியிட திட்டமிட்டுள்ளது. கே.சந்திரசேகர் ராவின் புதிய அரசியல் கட்சிக்கு கார் தான் தேர்தல் சின்னமாக இருக்கும்.

இந்நிலையில், சந்திரசேகர் ராவ் அழைப்பின் பேரில் ஹைதராபாத் சென்றுள்ளார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி. அவரை டிஆர்எஸ் கட்சி சட்டமன்ற கொறடா சுமன் ரெட்டி வரவேற்றார். தேசிய கட்சியைத் தொடங்கும் கேசிஆரின் அறிவிப்பு விழாவில் திருமாவளவன் பங்கேற்கிறார். ஹைதராபாத்தில் நடக்க உள்ள இந்த நிகழ்ச்சியில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் பலர் பங்கேற்கின்றனர்.

தெலுங்கானா மாநிலம் சென்றுள்ள திருமாவளவன் அங்கு பல்வேறு தலைவர்களையும் சந்தித்து வருகிறார். ஹைதராபாத்தில் ஆல் இந்தியா கன்ஃபெரேஷன் எஸ்.சி/எஸ்.டி தலைவர் மகேஸ்வரராஜ், திருமாவளவனை சந்தித்துப் பேசினார். மேலும், கேசிஆர் அழைப்பின் பேரில் ஹைதராபாத் சென்றுள்ள கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமியுடனும் திருமாவளவன் சந்தித்துப் பேசினார்.

கேசிஆர் தொடங்கும் புதிய தேசியக் கட்சியான ‘பாரத் ராஷ்ட்ரிய சமிதி’ அறிமுக விழாவில் பங்கேற்பதற்காக வந்துள்ள பிற மாநிலத் தலைவர்களை விசிக தலைவர் திருமாவளவனுக்கு அறிமுகம் செய்து வைத்தார் சந்திரசேகர் ராவ். இன்று காலை தெலுங்கானா முதல்வர் மாளிகையில், முக்கிய அரசியல் தலைவர்கள், நாடு முழுவதுமுள்ள விவசாய சங்கங்களின் நிர்வாகிகளுக்கு காலை சிற்றுண்டி அளித்தார் சந்திரசேகர ராவ். விசிக தலைவர் திருமாவளவன், கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமி, விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் திகாயத் உள்ளிட்ட தலைவர்கள் சந்திர சேகர் ராவுடன் இணைந்து காலை சிற்றுண்டி சாப்பிட்டனர். பின்னர், அவர்கள் இணைந்து ஆலோசனையில் ஈடுபட்டனர்.