மதத்தை வைத்து பிழைப்பு நடத்துபவர்கள் திராவிட மாடல் ஆட்சி ஆன்மீகத்திற்கு எதிரானது என்று பேசி வருகிறார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
“வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்” என்று பாடிய திருவருட் பிரகாச வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் 5.10.1823 அன்று சிதம்பரம் அருகில் மருதூரில் பிறந்தார். ஆன்மீகவாதியான வள்ளலார் சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபையை நிறுவினார். கடவுளின் பெயரில் செய்யப்படும் உயிர்பலியை தடுத்து நிறுத்தினார். மக்களின் பசியை போக்குவதற்காக வடலூரில் சத்திய தரும சாலையையும் நிறுவினார். சமத்துவம், கல்வி, தியானம் போன்றவற்றை மக்களிடம் பரப்பினார். திருவருட்பா, ஜீவகாருண்யம், அருள்நெறி போன்ற பல ஆன்மீக நூல்களை எழுதியுள்ளார்.
முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று சென்னை, இராஜா அண்ணாமலைபுரம், அருள்மிகு கபாலீசுவரர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில், வள்ளலார் முப்பெரும் விழாவினை கொண்டாடுகின்ற வகையில், வள்ளலார் – 200 இலச்சினை, தபால் உறை மற்றும் சிறப்பு மலர் ஆகியவற்றை வெளியிட்டு, 52 வாரங்களுக்கான விழாக்களில் முதல் வார நிகழ்ச்சிகளையும், ஆண்டு முழுவதும் அன்னதானம் வழங்கும் நிகழ்வையும் தொடங்கி வைத்தார். வள்ளலார் பிறந்த 200-வது ஆண்டை கொண்டாடுகின்ற வகையிலும், அவர் தர்மசாலை தொடங்கிய 156-வது ஆண்டு கொண்டாடுகின்ற வகையிலும், அதே போல் ஜோதி தரிசனம் காட்டுவித்த 152-வது ஆண்டை கொண்டாடுகின்ற வகையிலும் வள்ளலார் முப்பெரும் விழாவினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்து, “வள்ளலார் தனிப்பெருங்கருணை” சிறப்பு மலரை வெளியிட்டு, சுத்த சன்மார்க்க அன்பர்கள் திரு. மழையூர் சதாசிவம், திரு. சா.மு. சிவராமன், திருமதி தனலட்சுமி, திரு. எம். பாலகிருஷ்ணன், திரு. சிவப்பிரகாச சுவாமிகள் ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்து, நினைவுப் பரிசு வழங்கி சிறப்பித்தார்.
அதனைத் தொடர்ந்து, வள்ளலார் முப்பெரும் விழாவில், வள்ளலாரின் “தனிபெருங்கருணை நாள்” முன்னிட்டு 5.10.2022 முதல் ஆண்டு முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார். வள்ளலார் வழியில் சிறப்பாகத் தொண்டாற்றிய 10 சேவை நிறுவனங்களுக்கு சிறப்புப் பரிசும் வழங்கப்பட்டது. இந்த விழாவில் வள்ளலார் பக்தர்களும், அவரது வழியில் சேவை ஆற்றும் தொண்டர்களும் பெரும் திரளாகப் பங்கு கொண்டனர். இந்த விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. வள்ளலாரின் 200வது பிறந்தநாளை முன்னிட்டு இந்த முப்பெரும் விழாவானது தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் 52 வாரங்கள் அடுத்த வருடம் அக்டோபர் வரையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:-
வள்ளலார் பிறந்து 200 ஆண்டுகள் ஆகி விட்டது. அவர் தொடங்கிய தர்மசாலைக்கு அவர் ஏற்றிய தீபத்திற்கு 152 ஆண்டுகள் ஆகிறது. இந்த மூன்றையும் இணைத்து முப்பெரும் விழாவாக நடத்துகிறோம். இந்த நிகழ்ச்சி நடத்துவது சிலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஏன் சிலருக்கு அதிர்ச்சியாகவும் இருக்கலாம். என்னைப்பொறுத்தவரையில் சிலர் சொல்லிவரக்கூடிய அவதூறுகளுக்கு பதில் சொல்லக்கூடிய விழாதான் இந்த விழா.
திராவிட மாடல் ஆட்சி என்பது ஆன்மீகத்திற்கு எதிரானது.. திராவிட மாடல் ஆட்சியானது மக்களின் நம்பிக்கைகளுக்கு எதிரானது என்று மதத்தை வைத்து பிழைக்கக்கூடியவர்கள் பேசி வருகிறார்கள். நான் மீண்டும் சொல்கிறேன் முன்னாடி சொன்னதை எடுத்துக்கொண்டு பின்னாடி சொன்னதை வெட்டி விட்டு சில சமூக ஊடகங்கள் வெளியிடும். அதனால் முன் கூட்டியே சொல்ல கடமைப்பட்டுள்ளேன். நான் பின்னால் பேசுவதை வெட்டிவிட்டு முன்னால் நான் சொன்னதை திமுக அரசு ஆன்மீகத்திற்கு எதிரானது என்று சொல்வார்கள். திமுக ஆன்மீகத்திற்கு எதிரானது. ஆன்மீகத்தை அரசியலுக்கும் தங்களின் சொந்த அரசியலுக்கும் உயர்வு தாழ்வு கற்பிப்பவர்களுக்கு பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே எதிராக பயன்படுத்தும் ஆட்சி திராவிட மாடல் ஆட்சி. தமிழ் மண்ணின் சமய பண்பாட்டை அறிந்தவர்கள் இதை நன்கு உணர்வார்கள்.
பிறப்பால் உயர்வு தாழ்வு இல்லை என்று பிற்போக்கு கருத்துக்களை எதிர்க்கக் கூடிய வள்ளுவர் பிறந்த மண்தான் இந்த தமிழ் மண். நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையிலே என்று சித்தர்கள் கூறி உலவிய மண் நம்முடைய தமிழ் மண். இறைவன் ஒருவன் தான் அவன் ஜோதி வடிவானவன் என்று எடுத்துச்சொன்ன மண் வள்ளலார் பிறந்த மண்.
கோட்டைக்கு வருவதைவிட கோவிலுக்கு அதிகம் செல்பவர் தான் அமைச்சர் சேகர்பாபு. அறப்பணிகள் எல்லாம் முறையாக நடக்கிறதா என்பதை பார்ப்பதற்காக தான் சேகர்பாபு அதிக நேரம் செலவிடுகிறார். ஒரு நளைக்கு மூன்று ஊர்களில் உள்ள கோவில்களுக்கும் சென்றுவருவார். திமுக தேர்தல் அறிக்கையில் கூறியவாறு, வடலூரில் ரூ.100 கோடி மதிப்பில் சர்வதேச வள்ளலார் மையம் அமைக்கும் பணி விரைவில் துவங்கும். இவ்வாறு அவர் பேசினார்.