தமிழக சட்டப்பேரவை அக்.17ம் தேதி கூடுகிறது: சபாநாயகர் அப்பாவு!

தமிழக சட்டப்பேரவை அக்.17ம் தேதி கூடும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை அக்.17ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அப்பாவு கூறுகையில், அன்றைய தினம் மறைந்த முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா உட்பட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், பிரபலங்கள் உள்ளிட்டோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு பேரவை ஒத்திவைக்கப்படும். இதனைத்தொடர்ந்து அக்.17ம் தேதி அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெறும். இந்த கூட்டத்தில் பேரவை கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்தலாம் என்பது குறித்து முடிவு செய்யப்படும். இதற்கு அடுத்த நாள் துணை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும். அதன் மீதான விவாதங்கள் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது குறித்து அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து அதிமுக விவகாரம் குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, அதிமுக விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அதிமுகவின் கொறடா அளித்த கடிதம் தொடர்பாக உரிய நேரத்தில் முடிவு செய்யப்படும். ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமி அளித்த கடிதங்கள் தொடர்பாக இரு தரப்பினரிடமும் விளக்கம் கேட்பது தொடர்பாக ஆய்வில் உள்ளது.

ஓபிஎஸ், இபிஎஸ் அணியினருக்கான இருக்கைகள் தொடர்பாக சட்டப்பேரவை கூடும்போது தெரியவரும். ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் முதலமைச்சர்களாக இருந்தவர்கள். நிச்சயம் கண்ணியமாக நடந்துகொள்வார்கள். அதேபோல் இருக்கைகள் ஒதுக்குவது தொடர்பாக சட்டமன்ற மரப்புபடியே நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல் சட்டப்பேரவையில் கேள்வி – பதில் நேரம் நேரலை செய்து வருகிறோம். தொடர்ந்து முழுமையாக வழங்க வேண்டும் என்பது திமுக அரசின் தேர்தல் வாக்குறுதி. விரைவில் சட்டமன்றத்தின் அனைத்து செயல்பாடுகளும் நேரலையாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.