இலங்கை பிரச்சனைக்கு பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே தீர்வுகாண முடியும்: அண்ணாமலை!

இலங்கை பிரச்சனைக்கு பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே தீர்வுகாண முடியும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா சென்றுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அக்கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணி ஏற்பாடு செய்த ‘டுவிட்டர் ஸ்பேஸ்’ தளத்தில், ‘மாற்றத்தை நோக்கி தமிழகம்’ என்ற தலைப்பில் பேசினார். அப்போது அண்ணாமலையிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது. அதில் தமிழக அரசியல் பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு, தமிழக அரசியல் நீண்ட காலம் தனி மனிதர்களின் ஆளுமைகளுக்கு இடையேயான போட்டியாக இருந்தது. ஆனால், இப்போது அந்த சூழலில் இருந்து மாறுபட்டு, கருத்தியல் ரீதியான போட்டி தளமாக மாறியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து தமிழ்நாடு மாடல் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, அன்றைய அரசியல் சூழலில் நேரு அரசு, பெரும் தொழில் நிறுவனங்களை ஆந்திரா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் அமைத்தது தான், தென்மாநில வளர்ச்சிக்கு காரணம். ஒவ்வொரு மாநிலத்தின் வளர்ச்சிக்கும், மற்ற மாநிலங்கள் உதவியிருக்கின்றன. எனவே, தமிழகத்தின் இன்றைய வளர்ச்சிக்கு காரணம், ‘திராவிட மாடல்’ என்பதை விட, ‘தமிழ்நாடு மாடல்’ என்று சொல்வதே சரியானதாக இருக்கும் என்று தெரிவித்தார்.

திமுக அரசின் செயல்பாடுகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, சமீபத்தில், அமெரிக்காவிற்கு இந்தியாவின் பல மாநிலங்களைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் குழு வந்தது. அதில் வந்த தமிழக அதிகாரிகளின் திறமையை பார்த்து வியந்ததாக, அங்கு முக்கிய பொறுப்பில் இருந்தவர்கள் தெரிவித்தனர். இப்படி திறமையான அதிகாரிகளை, கடந்த 500 நாட்களில் திமுக அரசு பயன்படுத்தியதாக தெரியவில்லை. திமுகவின் 500 நாட்கள் ஆட்சி பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது என்று தெரிவித்தார்.

தொடர்ந்து ராஜராஜ சோழன் சர்ச்சை பற்றி அண்ணாமலை கூறுகையில், ராஜராஜசோழன் இந்துவா என்று சிலர் பேசுகின்றனர். இந்து வாழ்வியல் முறை, பஞ்சபூத ஆராதனை போன்றவற்றை ராஜராஜ சோழன் பின்பற்றினார். அதனால் அவர் இந்து தான். ராஜராஜ சோழன் இந்துவா என்ற சர்ச்சை, இளைஞர்கள் மத்தியில் இந்து வாழ்வியல் முறையை எடுத்துச்செல்ல உதவுகிறது. இந்து பெயர் ஆங்கிலேயர்கள் வைத்தது ஆனால் ராஜராஜசோழன் இந்துவா என்பது தேவையில்லாத சர்ச்சை. இதனால் யாருக்கும் பயனில்லை. உலகில் உள்ள மதங்களுக்கெல்லாம் தாய் மதம் இந்து மதம். இந்து என்பது மதமல்ல. வாழ்வியல் முறை. பஞ்சபூதங்களை அடிப்படையாகக் கொண்ட வாழ்வியல் முறைக்கு, ஆங்கிலேயர்கள் தான் இந்து மதம் என்று பெயர் வைத்தனர் என்று தெரிவித்தார்.

ஐநா சபையில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களித்தது பற்றி கூறுகையில், 13-வது சட்டத் திருத்தத்தின்படி, இலங்கை தமிழர்களுக்கு அனைத்து வகைகளிலும் சம உரிமை, சம வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக, இந்திய அரசு குரல் கொடுத்து வருகிறது. ஆனால் ஐநா-வில் இலங்கைக்கு எதிராக வாக்களித்தால், எதையும் சாதிக்க முடியாது. அங்குள்ள தமிழர்களுக்கு உதவி செய்வதற்கு, இலங்கை உடனான இணக்கமே காரணம். இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்கவில்லை. இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களித்தால், அங்கு தமிழர்களின் உரிமைகள் பற்றி இந்தியாவால் பேச முடியாது. இலங்கை பிரச்சனைக்கு பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே தீர்வுகாண முடியும் என்று தெரிவித்தார்.