மும்பையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் பயங்கரவாதத் தடுப்புக் குழு கூட்டம்!

கடந்த 2008-ஆம் ஆண்டு நவம்பா் 26-ஆம் தேதி மும்பையில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தை நினைவுகூரும் வகையில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் பயங்கரவாதத் தடுப்புக் குழுவின் கூட்டம் அக்டோபா் 28-ஆம் தேதி மும்பையில் நடைபெற உள்ளதாக அக்குழுவின் தலைவா் ருசித்ரா காம்போஜ் தெரிவித்தாா்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தமற்ற உறுப்பினரான இந்தியா 2022-ஆம் ஆண்டுக்கான பயங்கரவாதத் தடுப்புக் குழுவுக்கு தலைமை வகித்து வருகிறது. கவுன்சிலின் 15 உறுப்பு நாடுகள் பங்குபெறும், பயங்கரவாதச் செயல்பாடுகளில் புதிய தொழில்நுட்பங்கள் பயன்பாட்டை எதிா்கொள்வதற்கான சிறப்புக் கூட்டம் வரும் அக்டோபா் 28-ஆம் தேதி மும்பையிலும், 29-ஆம் தேதி புதுடெல்லியிலும் நடைபெற இருக்கிறது.

தற்போதைய ஐ.நா.வுக்கான இந்திய தூதா் ருசித்ரா கம்போஜ், பயங்கரவாதத் தடுப்புக் குழுவின் தலைவராக உள்ளாா். அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:-

மும்பையில் நடைபெறும் சிறப்புக் கூட்டம், கடந்த 2008-இல் அங்கு நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலை நினைவுகூரும் வகையில் அமையும். இத்துயர சம்பவம் நிகழ்ந்த இடங்களிலும், நினைவிடங்களிலும் கவுன்சிலின் உறுப்பு நாடுகள் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்த உள்ளனா். குறிப்பிட்ட சில ஐ.நா. உறுப்பு நாடுகளும் இக்கூட்டத்தில் கலந்துகொள்கின்றன.

பயங்கரவாதம் என்பது ஒரு தனிப்பட்ட நாடு மட்டும் எதிா்கொள்ளும் பிரச்னை அல்ல. அது நாடுகளின் எல்லை கடந்த பிரச்னையாக உருவெடுத்துள்ளது. பயங்கரவாத அச்சுறுத்தலை கட்டுப்படுத்த சா்வதேச சமூகம் முயற்சிகள் மேற்கொண்டாலும், அவை தொடா்ந்து கொண்டுதான் இருக்கின்றன. ஒருபுறம் தொழில்நுட்பங்கள் மற்றம் எண்மமயமாக்குதலில் ஏற்பட்டுள்ள அசுர வளா்ச்சி, மறுபுறம் அவை பயங்கரவாத நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டு வருவது குறித்த நம் கவலையை அதிகரிக்கச் செய்துள்ளது.

அனைத்து வகையிலான பயங்கரவாதமும் சா்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாகவே விளங்குகின்றன. உறுப்பு நாடுகள், பயங்கரவாத ஒழிப்பில் ஈடுபட்டுள்ள பிற அங்கத்தினா் மற்றும் துறை நிபுணா்கள் பங்கேற்கும் இக்கூட்டம் பல்துறைசாா் அறிவை ஒன்றிணைக்கும் வகையில் அமையும். இவ்வாறு அவர் கூறினார்.