சதி திட்டங்களை தவிடு பொடியாக்கியவர் ஸ்டாலின்: வேல்முருகன்!

சதிகார கும்பல்களின் சதி திட்டங்களை தவிடு பொடியாக்கியவர் ஸ்டாலின் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் புகழாரம் சூட்டியுள்ளார்.

திமுக தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:-

திமுக தலைவரான பிறகு சந்தித்த முதல் சட்டமன்ற தேர்தலிலேயே, சதிகார கும்பல்களின் சதி திட்டங்களை தவிடுபொடியாக்கி, தமிழக மக்களின் உள்ளங்களை குளிர வைத்து தனக்கு ஏற்பட்ட சோதனைகளை வரலாற்று சரித்திரமாக மாற்றி அமைத்து, தமிழக முதல்வராக பொறுப்பேற்றார். அடிமை விலங்கை உடைத்து முதல்வராக பொறுப்பேற்பதற்கு முன்பாக, பாஜக-ஆர்.எஸ்.எஸ் கும்பலிடம் தமிழகத்தை அடமானம் வைத்திருந்தது அடிமை அதிமுக அரசு. அந்த அடிமை விலங்கை உடைத்தெறிந்து, சமூக நீதியை நிலைநாட்டியது திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசும், அதன் தலைவர் மாண்புமிகு முதல்வர் அவர்களே.

காவி கும்பல்கள், நாட்டையே தன் கட்டுக்குள் வைத்துக் கொள்ள முயன்று வரும் சூழலில், வட ஆரிய சக்திகளின் ஆதிக்கத்திற்கு, தமிழ் மண்ணில் இடம் இல்லை என்ற முழக்கம், தனது திராவிட, சமூக நீதியின் கோட்பாடுகளால் விண் அதிர வைத்த பெருமை முதல்வர் அவர்களையே சாரும். இத்தகைய நிலையில், திமுக தலைவராக 2-வது முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் மனமார்ந்த பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். அதோடு, போட்டியின்றி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ள பொதுச் செயலாளர் துரைமுருகன் அவர்களுக்கும், பொருளாளர் டி.ஆர்.பாலு அவர்களுக்கும், திமுக துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள மதிப்பிற்குரிய கனிமொழி எம்.பி அவர்களுக்கும், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் மனமார்ந்த பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.