பாட்டாளி மக்கள் கட்சி 2026 இல் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும்: அன்புமணி!

பாட்டாளி மக்கள் கட்சி 2026 இல் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும். அதற்காக வியூங்களை 2024 இல் வகுக்கும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே கொல்லியங்குணம் பகுதியில் விழுப்புரம் மாவட்ட பா.ம.க. நிர்வாகிகள், முன்னோடிகளுடன் ஆலோசனை நிகழ்ச்சி நடைபெற்றது. பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான டாக்டர் அன்புமணி ராமதாசுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியதாவது:-

தமிழகத்தில் குடிசைகள் அதிகம் உள்ள மாவட்டம் விழுப்புரம். கல்வி வளர்ச்சியில் கடைசி இரண்டு இடங்களில் உள்ள மாவட்டங்களில் விழுப்புரம் ஒன்று. ஆனால் டாஸ்மாக் விற்பனையில் தமிழகத்தில் விழுப்புரம் முதல் இடத்தில் உள்ளது. முதல்வர் ஸ்டாலின் விழுப்புரம் மாவட்டத்திற்கு தனி கவனம் செலுத்த வேண்டும். தென்பெண்ணையாற்றில் ஆண்டிற்கு 30டிஎம்சி தண்ணீர் கடலில் கலக்கிறது. தடுப்பனைகள் அமைக்க வேண்டும். நந்தன் கால்வாய் திட்ட ம் கிடப்பில் போடப்பட்டுள்ளது உடனடியாக அதனை நிறைவேற்ற வேண்டும்.

முலாயம்சிங் யாதவ் மறைவு சமூக நீதிக்கு பேரிழப்பு. மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் இந்தியை கட்டாயம் படிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற நிலைக்குழு ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்துள்ளது. இது அபத்தமானது. ஆபத்தானது. கடுமையாக எதிர்ப்போம். தற்போது பிஜேபி ஆட்சியில் இந்தியை திணித்து வருகிறார்கள். இணைப்பு மொழி ஆங்கிலத்தை எடுத்துவிட்டு ஹிந்தியை திணிக்க முயற்சி செய்கிறார்கள். இதனை கடுமையாக எதிர்ப்போம்.

இந்தி கற்றுக்கொள்ளுங்கள் என்று ஒரு வேண்டுகோள் விடுத்தால், குழந்தைகள் கற்றுக்கொள்வார்கள். கட்டாயம் இந்தியை படித்தே ஆகவேண்டும் என்று திணித்தால், கடுமையாக எதிர்ப்போம். எல்லா மாநிலங்களுக்கும் தனி அடையாளங்கள் உள்ளன. அதில் முதன்மை அடையாளம் மொழி. அந்த முதன்மை அடையாளத்தையே அழித்துவிட்டு, உங்கள் அடையாளத்தை திணிக்கப் பார்க்கிறீர்கள். அதை நிச்சயமாக நாங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டோம். பாட்டாளி மக்கள் கட்சி 2026 இல் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும். அதற்காக வியூங்களை 2024 இல் வகுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.