முலாயம்சிங் இறுதி நிகழ்வில் டி.ஆர்.பாலு, உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு!

உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வரும் சமாஜ்வாதி கட்சியின் நிறுவனருமான மறைந்த முலாயம் சிங் யாதவ் இறுதி நிகழ்வில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ ஆகியோர் பங்கேற்றனர்.

முலாயம் சிங் யாதவ் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவரின் உடல்நிலை குறித்து அக்கறையுடன் விசாரித்தார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். வயது முதிர்ச்சி, உடல்நலன் பாதிப்பால் மறைந்த முலாயம்சிங் யாதவ்-க்கு முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தும் வகையில் இரங்கல் தெரிவித்திருந்தார். முதல்வர் ஸ்டாலின் தமது இரங்கல் செய்தியில், உத்தர பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவருமான முலாயம் சிங் அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து மிகவும் வேதனையடைந்தேன். இந்திய அரசியலின் பெரும் தலைவர்களில் ஒருவரான முலாயம் சிங் அவர்கள் பிற்படுத்தப்பட்ட மக்களின் இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக உறுதியாக நின்றவர் என்பதோடு, மதச்சார்பின்மைக் கருத்தியலில் ஆழமான பிடிப்பு கொண்டிருந்தவர் ஆவார். அன்னாரது மறைவு ஈடுசெய்யவியலாப் பேரிழப்பு ஆகும். திரு. முலாயம் சிங் அவர்களை இழந்து வாடும் சகோதரர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட அவரது குடும்பத்தினருக்கும், சமாஜ்வாதி கட்சித் தொண்டர்களுக்கும் எனது இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கழகப் பொருளாளரும் – நாடாளுமன்றக் குழுத் தலைவருமான டி.ஆர். பாலு, முலாயம் சிங் அவர்களின் உடலுக்கு நேரில் சென்று இறுதி மரியாதையைச் செலுத்துவார் என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் உத்தரப்பிரதேசத்தில் முலாயம்சிங் யாதவின் சொந்த ஊரான சைபாய் (சைஃபை) கிராமத்தில் முழுமையான அரசு மரியாதையுடன் அவரது நல்லுடல் தகனம் செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட பல தலைவர்கள் பங்கேற்றனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தது போல திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி.யும் முலாயம்சிங் இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்றார். அவருடன் திமுக இளைஞரணி செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலினும் பங்கேற்றார். மேலும் தந்தையை இழந்து தவிக்கும் அகிலேஷ் யாதவுக்கு உதயநிதி ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.