தமிழ் சினிமாவால் இளைஞர்கள், தமிழ் கலாச்சாரம் மற்றும் பண்பாடு ஆகியவை சீர்கெடுகிறது. சினிமாவை அடியோடு ஒழித்துக் கட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி விமர்சித்துள்ளார்.
சிதம்பரத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளி சீருடையில் இருந்த மாணவி ஒருவருக்கு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் பேருந்து நிலையத்தில் வைத்து தாலி கட்டினார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்ட நபரையும், தாலி கட்டிய பாலிடெக்னிக் மாணவரையும் போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் நட்சத்திர நடிகை நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியினர் வாடகை தாய் மூலம் குழந்தைப் பெற்றுக் கொண்ட விவகாரம் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. தம்பதியினர் விதிகளை மீறி வாடகை தாய் மூலம் குழந்தைப் பெற்றுக்கொண்டதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சிலர் குரல் கொடுத்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தை பெற்றுக்கொண்ட விவகாரம் தொடர்பாக விளக்கம் கேட்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார். இதனால் நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியினர் சிக்கலில் சிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியானது. இதுதொடர்பான விவாதங்களும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த இரு விவகாரங்கள் தொடர்பாக புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது பேஸ்புக் பக்கத்தில், சீருடையில் உள்ள பள்ளி மாணவிக்கு பாலிடெக்னிக் மாணவன் தாலி கட்டும் ஹீரோயிசம். திருமணமான 4 மாதத்தில் குழந்தை பிறந்ததாக அறிவிக்கும் சூப்பர் ஹீரோயின் என்று விமர்சித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் தமிழ் சினிமாவால் தமிழ் இளைஞர்கள், கலாச்சாரம், பண்பாடு ஆகியவை சீர்கெடுகிறது. இதனால் சினிமாவை அடியோடு ஒழித்துக் கட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று கருத்து பதிவிட்டுள்ளார். இவர் ஏற்கனவே விருமாண்டி மற்றும் கொம்பன் உள்ளிட்ட படங்களின் தலைப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.