ஜெயலலிதா இருந்திருந்தால் அமைச்சர்கள் தான் தூக்கம் இன்றி தவித்து இருப்பார்கள்: டிடிவி தினகரன்

தமிழக முதல்வராக உள்ள ஸ்டாலின் தூக்கம் வராமல் தவிப்பதாக பேசி உள்ளார். ஆனால் ஜெயலலிதா இருந்திருந்தால் அமைச்சர்கள் தான் தூக்கம் இன்றி தவித்து இருப்பார்கள் என, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேசினார்.

தமிழகத்தில் சொத்துவரி, மின்கட்டண உயர்வு ஆகியவற்றை கண்டித்தும், திமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று தமிழகம் முழுவதும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது திமுக அரசுக்கு எதிராக கோஷமிடப்பட்டது. மேலும் சொத்து வரி, மின்கட்டணம் உயர்த்த மாட்டோம் எனக்கூறி பொதுமக்களை ஏமாற்றி விட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.

இதேபோல் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமமுகவினர் இன்று ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். இதற்கு அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தின்போது டிடிவி தினகரன் பேசினார். அப்போது அவர் திமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்தார். இதுதொடர்பாக டிடிவி தினகரன் பேசியதாவது:-

எம்ஜிஆர் தயவால் தான் கருணாநிதி ஆட்சிக்கு வந்தார். ஆனால் எம்ஜிஆருக்கு துரோகம் செய்துவிட்டு அவர் வளர்த்த கட்சியில் இருந்து தூக்கி எறிந்த பிறகு தீயசக்தி திமுகவை இனி ஆட்சியில் இருக்க விடமாட்டேன் என சவால் விடுத்து மக்களுக்காக 5 ஆண்டுகள் பாடுபட்டு 1977 ல் எம்ஜிஆர் ஆட்சி பொறுப்புக்கு வந்தார். அவரது மறைவு வரை பொற்கால ஆட்சியை கொடுத்தார். எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு தொண்டர்கள் பிரிந்து நின்றதால் விபத்தை போல் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தது. இருப்பினும் 2 ஆண்டுகளிலேயே அந்த ஆட்சியும் கலைக்கப்பட்டது. எம்ஜிஆர், ஜெயலலிதா தொண்டர்கள் தவறை உணர்ந்து ஒன்றிணைந்தால் மீண்டும் அதிமுக ஆட்சி வந்தது. ஜெயலலலிதா 5 ஆண்டு முதல்வராக இருந்தார். 1996ல் பொய்ப்பிரசாரத்தால் திமுக ஆட்சிக்கு வந்தது. அடாவடி செய்ததால், 2001ல் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தார். 2006ல் மைனாரிட்டி திமுக ஆட்சி வந்தது. அதன்பிறகு 2011 முதல் 10 ஆண்டுகளாக ஜெயலலிதாவின் ஆட்சி நடந்தது.

துரதிர்ஷ்டவசமாக 4 ஆண்டுகள் அண்ணன் பழனிச்சாமியின் ஆட்சி இருந்த சூழலில் அவரது தவறான நிர்வாகம், ஊழல், முறைகேடு குற்றச்சாட்டுகளால் அவரை சார்ந்த அமைச்சர்கள், எம்எல்ஏக்களின் திருவிளையாடல்களால் மக்கள் கோபம் கொண்டு திமுகவுக்கு வாய்ப்பு கொடுத்தனர். பழனிச்சாமியின் மீதான கோபத்தில் மக்கள் திமுகவுக்கு ஆட்சியை கொடுத்தனர். அதோடு திமுக திருந்தி இருக்கும் என நினைத்தார்கள். ஆனால் நாங்கள் திருந்தவே மாட்டோம் என்று அவர்கள் பிரகடனப்படுத்தும் வகையில் தான் இன்று ஆட்சி நடந்து வருகிறது. பழனிச்சாமி ஆட்சியில் இருந்து போகும்போது 5 முதல் 6 லட்சம் கோடி கடன் இருந்தது. இது முதல்வர் ஸ்டாலினுக்கும், நிதி அமைச்சராக உள்ள பழனிவேல் தியாகராஜனுக்கு தெரியாதா?.

அதிமுக ஆட்சி அதிகாரத்தில் ஊழல் நடப்பதாக கூறி ஆளுநரிடம் திமுகவினர் புகார் கூறினர். மேலும் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஊழல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என்றனர். தமிழ்நாட்டு மக்கள் திமுகவுக்கு வாக்களிப்பார்கள் என தெரிந்தும், நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை கூறி மக்களை ஸ்டாலின் ஏமாற்றி உள்ளார். 10 ஆண்டு ஆட்சி பொறுப்பில் இல்லை. எப்படியாவது ஆட்சிக்கு வர வேண்டும் என்ற நோக்கத்தில் தனது நீண்டநாள் கனவான முதல் அமைச்சர் இருக்கையில் அமர வேண்டும் என்பதற்காக வாக்குறுதிகளை கொடுத்துவிட்டு நிறைவேற்ற முடியாமல் தவிக்கிறார். தூக்கம் வராமல் தவிப்பதாக முதல் அமைச்சர் ஸ்டாலின் பொதுக்குழுவில் பேசுகிறார். ஜெயலலிதா இருந்தால் அமைச்சர்களுக்கு தான் தூக்கம் வராத நிலை இருக்கும். பொழுது விடிந்தால் அமைச்சராக இருப்போமா என்ற நிலை அமைச்சர்களுக்கு தெரியாது. ஆனால் இன்று அந்த நிலை மாறி ஸ்டாலின் தூக்கம் இன்றி தவிக்கிறார்.

ஒருபக்கம் திமுக தலைவர் பதவி, இன்னொரு பக்கம் முதல்வர் பதவி என ஸ்டாலின் பேசுகிறார். ஸ்டைல் மட்டும் மாறாமல் பொய்களை சொல்லும் திமுகவின் ஸ்டாலின் தான் 2016 தேர்தலில் செந்தில் பாலாஜியை கடுமையாக விமர்சித்தார். ஆட்சிக்கு வந்தவுடன் அவரை சிறையில் அடைப்பதாகவும் கூறினார். ஆனால் இப்போது செந்தில் பாலாஜியை அமைச்சராக்கி உள்ளார். செந்தில் பாலாஜியால் தான் இப்போது பிரச்சனையே. மூத்த அமைச்சர்கள் அனைவரும் கொதித்து போய் உள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.