மீண்டும் மொழி போர் வந்துவிடக்கூடாது என்று தான் முதல்வர் அறிக்கை வெளியிடுள்ளார். தமிழ் , ஆங்கிலம் இரண்டு மொழிகள் இருக்ககூடிய சூழல் தான் தமிழகத்தில் உள்ளது என திமுக எம்பி கனிமொழி பேட்டி அளித்துள்ளார்.
கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள கிருஷ்ணா தொழில்நுட்ப கல்லூரியில், சிஐடி அகாடமி எனப்படும் தகவல் தொழில் நுட்ப மையம் நடத்தும் இளைஞர் தலைமை பண்பு உச்சி மாநாட்டின், இளைஞர்களின் தொடர் சொற்பொழிவு போட்டிகளின் இறுதி சுற்று நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக துணை பொதுச் செயலாளருமான கனிமொழி கருணாநிதி கலந்துகொண்டு மாணவர்களிடையே உரையாற்றினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் கனிமொழி கூறியதாவது:-
பிற மொழியை கற்க வலியுறுத்த யாருக்கும் உரிமை கிடையாது. மொழி என்பது என்னுடைய அடையாளம். என்னை பற்றியும் , என் வரலாற்றை பற்றியும் தெரிந்துக்கொள்ள உதவுகிறது. நம்முடைய மொழி நமக்கு அடையாளமாகவும், சுயமரியாதையாகவும் இருக்கிறது.
மீண்டும் மொழி போர் வந்துவிடக்கூடாது என்று தான் முதல்வர் அறிக்கை வெளியிடுள்ளார். தமிழ், ஆங்கிலம் இரண்டு மொழிகள் இருக்ககூடிய சூழல் தான் தமிழகத்தில் உள்ளது. உலகத்தை நாம் தொடர்பு கொள்ள ஆங்கிலம் நமக்கு பயன்படுகிறது. அதே போல நம்முடன் பேசுவதற்கும், உணர்வுகளை பகிர்ந்து கொள்வதற்கும் தமிழ் மொழி இருக்கிறது. மொழிப் போர் குறித்து ஒரு கதவு போதுமானது என அண்ணா அன்றே கூறியுள்ளார். தமிழ்நாட்டில் இருக்கும் மாணவர்கள் கட்டாயம் தமிழ் கற்க வேண்டும் என்பதே தமிழக அரசின் நிலைபாடு.
இந்தியாவை பொறுத்தவரை பட்டியல் 8 ல் மொழிகள் எல்லாம் இணையாக, ஒரே நிலையில் பார்க்க வேண்டும். சில மொழிகள், அலுவல் மொழிகளை கொண்டு வர நினைக்கிறார்கள். ஆனால் அதை மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. நம்முடைய முதல்வர் மட்டுமின்றி, மற்ற மாநில முதல்வர்கள் கூட எதிர்வினை ஆற்றி உள்ளார்கள். மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டும்.
பெண்கள் ஆடை அணிவது குறித்த கருத்திற்கு பதிலளித்த கனிமொழி; தந்தை பெரியார் குறிப்பிட்ட மாதிரி பெண் தனக்கு எது வசதியான உடையோ, அலங்காரமோ அவர் தான் முடிவு செய்ய வேண்டும். அதை தான் பெரியார் வலியுறுத்தியுள்ளார். கட்டுபாடு என்பதை நாம் தான் முடிவு செய்ய வேண்டும் என தெரிவித்தார்.