‘மிக் 29-கே’ போர் விமானம் கடலில் விழுந்து விபத்தில் சிக்கியது!

கோவாவில் ‘மிக் 29-கே’ போர் விமானம் கடலில் விழுந்து விபத்தில் சிக்கியது. இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்திய கடற்படையிடம் உள்ள ‘மிக் 29-கே’ போர் விமானம், நேற்று கோவாவில் கடலுக்கு மேல் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டு இருந்தது. பயிற்சியை முடித்துக்கொண்டு அது கடற்படை தளத்துக்கு திரும்பிக்கொண்டிருந்தது. அப்போது அந்த விமானம் எதிர்பாராத விதமாக தொழில்நுட்பக் கோளாறில் சிக்கி கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இது குறித்து தகவல் அறிந்து விரைந்து சென்ற மீட்பு படையினர், மின்னல் வேகத்தில் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அந்த போர் விமானத்தை இயக்கிய விமானியை பத்திரமாக மீட்டனர். இந்த விபத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த விபத்து குறித்து கடற்படை தலைமையகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இதையொட்டி கடற்படை விடுத்துள்ள அறிக்கையில், “விமானியின் உடல்நிலை சீராக உள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மிக் 29-கே ரக போர் விமானம், எல்லா வானிலையிலும் இயங்கும் போர் விமானம், இது பல பயன்பாட்டு போர் விமானம், ரஷ்யாவின் மிக்கோயான் (மிக்) நிறுவனம் தயாரித்தது ஆகும். இத்தகைய 45 விமானங்களை ரஷ்யாவிடம் இருந்து 10 ஆண்டுகளுக்கு முன்னதாக இந்திய கடற்படை 200 கோடி டாலருக்கு (சுமார் ரூ.16 ஆயிரம் கோடி) வாங்கியது நினைவுகூரத்தக்கது. இந்த விமானங்கள், ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா விமானம்தாங்கி போர்க்கப்பலில் இருந்து இயங்குவதற்காக வாங்கப்பட்டது ஆகும்.