நீட் தேர்வுக்கு எதிராக அதிமுக ஆட்சிக் காலத்தில் தொடரப்பட்ட வழக்கு நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. இந்த வழக்கை விரைந்து நடத்தி தமிழக மாணவர்களுக்கு விடியலைக் கொண்டுவர வேண்டும் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
நீட் தேர்வு தொடர்பாக மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட சட்ட திருத்தத்தை எதிர்த்து எனது தலைமையிலான அரசால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அதன்பிறகு இந்த அரசு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இந்த வழக்கை நடத்த எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இந்நிலையில் அந்த வழக்கானது தாமாகவே உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்காக நாளை பட்டியலிடப்பட்டுள்ளது. ஆனால் அந்த வழக்கையும் நடத்த மனமில்லாமல் திமுக அரசு வாய்தா கோர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நீட் தரவரிசைப் பட்டியல் வெளிவர உள்ள நிலையில் வழக்கை நடத்தாமல் வாய்தா கேட்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. இச்செயல் தமிழக மாணவர்களின் மேல் திமுக அரசின் பொறுப்பற்ற தன்மையை வெளிக்காட்டுகிறது.
ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்திட்டு நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்வோம் எனவும் அதற்கான வழிமுறை தங்களுக்கு மட்டுமே தெரியும் என்று பொய்யான வாக்குறுதி அளித்து ஆட்சியை பிடித்தது திமுக. இந்த முறையாவது மூத்த வழக்கறிஞர்களை நியமித்து நீட் வழக்க்கை வெற்றிகரமாக நடத்தி, நீட் நுழைவுத் தேர்வு சட்டத்தை ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதிமுகவினருக்கு எதிராக பொய் வழக்குகளை போடுவதற்கு செலவிடும் நேரத்தில் ஒரு சிறு பகுதியையாவது நீட் வழக்குக்காக ஒதுக்கி தமிழக மாணவர்களுக்கு ஒரு விடியலை ஏற்படுத்தித் தர வேண்டும். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதேபோல் அவர் வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில், பாலூட்டும் தாய்மார்கள் அறைகளை சீர்படுத்தி, மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கழக நிறுவனர் எம்.ஜி.ஆர் காலம் தொட்டே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பெண்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு செயல்பட்டு வருகிறது. முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா பெண்களின் நலன் காக்க எண்ணற்ற திட்டங்களைக் கொண்டு வந்து நிறைவேற்றினார். பெண்கள் போற்றும் தலைவியாக அவர் திகழ்ந்தார். ஜெயலலிதாவின் சிந்தனையில் உருவான சீர்மிகு திட்டங்கள்தான் தொட்டில் குழந்தைத் திட்டம், பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையம், தாலிக்குத் தங்கம், பெண்களின் சுமைகளை குறைப்பதற்குக் கொண்டுவரப்பட்ட விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறி வழங்கும் திட்டம், உழைக்கும் மகளிருக்கு மானியத்துடன் இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம் என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.
அந்த வகையில் கைக்குழந்தைகளுடன் பயணிக்கும் பெண்கள், வெளியூர்களுக்கு செல்வதற்கு பேருந்து நிலையம் வரும் போது, கைக்குழந்தைகளுக்கு பாலூட்டுவதற்கு ஏதுவாக மறைவிட வசதியினை பேருந்து நிலையங்களில் உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என்ற தாய்மை உணர்வுடன், உயர்ந்த நோக்கத்தின் அடிப்படையில் உருவான திட்டம் தான் பேருந்து நிலையங்களில் தாய்மார்களுக்கென்று பாலூட்டும் தனி அறைகள் திட்டம். 2015-ஆம் ஆண்டில் ஜெயலலிதா முதல் அமைச்சராக இருந்தபோது இத்திட்டம் கொண்டுவரப்பட்டது. இத்திட்டம் பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
பெண்களுக்கென்று கொண்டுவரப்பட்ட இத்திட்டம் இந்த ஆட்சியில் கேட்பாரற்றுக் கிடக்கிறது. தமிழகமெங்கும் பேருந்து நிலையங்களில் உள்ள பாலூட்டும் தாய்மார்கள் அறை எந்தவித பராமரிப்பின்றியும், இருக்கைகள் சேதமடைந்த நிலையிலும், தூர்நாற்றம் வீசும் அவல நிலையிலும் மூடிக் கிடக்கிறது. மேலும், அப்பகுதிகள் அசுத்தமாகவும் காணப்படுகிறது. “மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு” என்று பேரறிஞர் அண்ணா சொன்னார். நல்ல கருத்துக்களை யார் சொன்னாலும் விரும்பியவர், விரும்பாதவர் என எண்ணாமல் அதனை ஏற்றுக்கொள்ளும் மனப் பக்குவம் வேண்டும். பேரறிஞர் அண்ணாவின் வழியை கடைபிடிப்போம் என்று சொல்பவர்கள், நாங்கள் கொண்டுவந்த மக்கள் நலத் திட்டங்களுக்கு மூடுவிழா காண்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். இதை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
எம்ஜிஆரும், ஜெயலலிதாவும், தொடர்ந்து அ.தி.மு.க அரசும், மக்கள் நலன் பார்த்து பார்த்து திட்டங்களை அறிமுகப்படுத்தி, செயல்படுத்தினோம். தமிழக மக்களும் அத்திட்டங்களால் பயனடைந்தனர். அந்தத் திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கிப் போட்டுள்ளது. மக்கள் ஏற்றுக்கொண்ட திட்டங்களை முடக்கும் போது, அவர்களுடைய வேதனையின் வெளிப்பாட்டை உங்களுக்கு, தேர்தல் மூலம் விரைவில் திருப்பித் தருவார்கள். இது வெகு தொலைவில் இல்லை. தமிழகத்தில் பேருந்து நிலையங்களிலுள்ள சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தாய்மார்கள் பாலூட்டும் அறைகள் எவ்வித பயன்பாடுமின்றி பூட்டிக் கிடக்கும் அவல நிலை தொடர்கிறது. இந்நிலை மாற வேண்டும். தாய்மார்கள் போற்றும் பாலூட்டும் தாய்மார்கள் அறைகளை உடனடியாக சீர்செய்து, மீண்டும் தாய்மார்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர இந்த அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.