நளினி, ரவிச்சந்திரன் விடுதலை தொடர்பாக குடியரசுத் தலைவர் கால தாமதம் செய்வதால் இந்த விவகாரத்தில் நீதிமன்றமே முடிவெடுக்கலாம் என்று, தமிழக அரசு இன்று பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பேரறிவாளன், முருகன் என்ற ஸ்ரீஹரன், நளினி, சாந்தன், ராபா்ட் பயஸ், ஜெயக்குமாா், ரவிச்சந்திரன் ஆகியோருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் பின்னர் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. இந்த ஏழு பேரில் பேரறிவாளன் விவகாரத்தில் தமிழக அமைச்சரவை தீா்மானத்தின் மீது ஆளுநா் முடிவெடுப்பதில் தாமதம் செய்ததாகக் கூறி அரசியலமைப்புச் சட்டத்தின் 142-ஆவது பிரிவின்கீழ் தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி பேரறிவாளனை உச்சநீதிமன்றம் கடந்த மே மாதம் விடுதலை செய்ய உத்தரவிட்டது.
இதனிடையே, சிறைத் தண்டனை அனுபவித்து வரும் மற்ற ஆறு பேரில் ரவிச்சந்திரன், நளினி இருவரும் தங்களையும் இதே காரணத்திற்காக சிறையில் இருந்து விடுதலை செய்யக் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த வழக்கின் முந்தைய விசாரணையில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் தமிழக அரசு இன்று பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதன்படி, நளினி, ரவிச்சந்திரன் விடுதலை தொடர்பாக குடியரசுத் தலைவர் கால தாமதம் செய்வதால் இந்த விவகாரத்தில் நீதிமன்றமே முடிவெடுக்கலாம் என்றும் நீதிமன்றத்தின் முடிவுக்கு தமிழக அரசு கட்டப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.