அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் வீட்டை துணை நடிகை சாந்தினி முற்றுகையிட்டதால் பரபரப்பு எழுந்துள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருந்தவர் மணிகண்டன். நாடோடிகள் படத்தில் நடித்தவர் துணை நடிகை சாந்தினி, இவர் மலேசிய சுற்றுலா கழகத்தில் ஒரு அதிகாரியாக பணியாற்றினார். அப்போது அமைச்சராக இருந்த மணிகண்டனுடன் சாந்தினிக்கு பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது காதலாக மாறியதாம். இந்த நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்வதாக சொல்லி ஏமாற்றியதாக திரைப்பட துணை நடிகை சாந்தினி அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்த நிலையில் சாந்தினி 3 முறை கர்ப்பம் அடைந்துள்ளார். இந்த மூன்று முறையும் சாந்தினியை வலுக்கட்டாயப்படுத்தி கர்ப்பத்தை மணிகண்டன் தனது மருத்துவ நண்பர் மூலம் கலைத்துள்ளதாகவும் சாந்தினி குற்றம்சாட்டியிருந்தார். தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டார் என புகார் கூறியிருந்தார் சாந்தினி.
சாந்தினியின் புகாரின் பேரில் அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மணிகண்டன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் பெங்களூரில் தலைமறைவாக இருந்த மணிகண்டன் கடந்த ஆண்டு ஜூன் 20 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் கைது செய்யப்பட்ட மணிகண்டன் பல முறை சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில் அவருக்கு கடந்த ஜூலை மாதம் நிபந்தனையுடன் கூடிய ஜாமீனை உயர்நீதிமன்றம் வழங்கியது. தன் மீதான வழக்குகளை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மணிகண்டன் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது சாந்தினி அளித்திருந்த புகாரை வாபஸ் பெற்றுவிட்டதாக கூறப்பட்டது. அப்போது நீதிபதி, சாந்தினி தனது புகழுக்கு களங்கம் ஏற்படுத்திவிட்டார் என மணிகண்டன் வழக்கு தொடர்ந்தால் என்னவாகும் என கேள்வி எழுப்பிய நீதிபதி, மணிகண்டன் மீதான வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டார்.
இந்த நிலையில் ராமநாதபுரத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் வீட்டை துணை நடிகை சாந்தினி முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சாந்தினி கூறுகையில், என்னை இனி பார்த்துக் கொள்வேன் என மணிகண்டன் உறுதியளித்ததால்தான் நான் வழக்கை வாபஸ் பெற்றேன். ஆனால் வழக்கை வாபஸ் பெற்ற நாள் முதல் மணிகண்டன் தலைமறைவாகவே இருக்கிறார். எனது போன் எண்களை பிளாக் செய்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன் தினம் மதுரையில் வைத்து மணிகண்டனை நான் பார்த்துவிட்டேன். என்னை பார்த்ததும் அவர் ஓடிவிட்டார். இதையடுத்து அவர் ராமநாதபுரத்தில் உள்ள வீட்டில் இருப்பதாக கிடைத்த தகவலின்படி நான் இங்கு வந்தேன். ஆனால் அவருடைய உறவினர்கள் என்னை தாக்குகிறார்கள். எனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். என் முன் மணிகண்டன் வந்து நிற்கும் வரை நான் இந்த இடத்தை விட்டு நகர மாட்டேன். என்னை பார்த்துக் கொள்வதாக கூறிவிட்டு இப்படி ஓடி ஒளிந்து கொள்ளலாமா என கண்ணீருடன் கேள்வி எழுப்பியுள்ளார் சாந்தினி.