பல மொழிகள் இருந்தால் தான் இந்தியா ஒரே நாடாக இருக்கும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற அலுவல் மொழிக்கான நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம் கடந்த சில நாட்களுக்கு முன்பாக நடைபெற்றது. இதில் 112 பரிந்துரைகள் செய்யப்பட்டு, அவை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த பரிந்துரைகளில் பெரும்பாலானவை இந்தி மொழியை திணிக்கும் முயற்சியாகவே இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு திமுக, காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், மதிமுக, விசிக, நாம் தமிழர் உள்ளிட்டோர் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதனிடையே மத்திய அரசின் இந்தி திணிப்பை கண்டித்து திமுக போராட்டம் அறிவித்து இருக்கிறது. நாளை திமுக இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் இந்த போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சீமானிடம் இந்தி திணிப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சீமான், இந்தியை திணிக்க முயற்சித்த போது, தமிழ்நாட்டில் தான் முதல்முறையாக புரட்சி வெடித்தது. இதுவரை மற்ற மாநிலங்கள் அமைதியாக இருந்துவிட்டன. அதற்கு காரணம், நாம் தான் உலகின் தொன்மையான மொழி. அதுமட்டுமல்லாமல், இந்திய மொழிகளின் தொன்மத்தை தமிழில் இருந்து அறியலாம் என்று பிரதமர் மோடியே பலமுறை பேசியுள்ளார். அந்த மொழியை காப்பதற்காக பலரும் உயிரிழந்தனர். இந்தியை கொண்டு வர வேண்டிய தேவை ஏன் உள்ளது. இந்தி நமது மாநில மொழி இல்லை. பல மொழிகள் இருந்தால் தான் இந்தியா ஒரே நாடாக இருக்கும். ஒரே மொழி என்றால், இந்தியா பல நாடுகள் பிறக்கும் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து சீமான் ஒரு மலையாளி என்று பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா விமர்சித்தது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, இதுவெல்லாம் ஒரு பேச்சே கிடையாது. என் சொந்த ஊர் காரைக்குடியில் அவர் ஒத்த வீட்டுக்காரர். சிக்கலை இழுத்துகொள்ள வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்தார். தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலிம் அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து பேசியது பற்றி கருத்துக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியது அவர்களின் கட்சி நிர்வாகிகளிடம். அதனால் அது பற்றி கருத்து பேச தேவையில்லை என்று தெரிவித்தார்.