தமிழ் சினிமாவில் அறிமுகமாகி 32 ஆண்டுகள் ஆனதையொட்டி நடிகர் விக்ரம் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
நடிகர் விக்ரம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகி 32 ஆண்டுகளாகிறது. கடந்த 1990 ஆம் ஆண்டு வெளியான என் காதல் கண்மணி தான் விக்ரம் நடித்த முதல் படம். தொடர்ச்சியாக அவர் நடித்த சில படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதன் காரணமாக தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வந்தார். கிட்டத்தட்ட 9 ஆண்டுகள் போராட்டத்துக்கு பிறகு பாலா இயக்கிய சேதுதான் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. இன்றுவரை ரசிகர்கள் அவரை சீயான் என அழைத்து வருகிறார்கள்.
அதன் பின்னர் தில், காசி, ஜெமினி, தூள் , சாமி, பிதாமகன் என தொடர்ச்சியாக அவர் நடித்த படங்கள் எல்லாம் வெற்றிபெற்றன. கமர்ஷியல் படங்கள் ஒருபுறம், எதார்த்தமான கதையம்சம் கொண்ட படங்கள் மறுபுறம் என இரண்டு பாதைகளில் பயணித்த அவர் இரண்டிலும் வெற்றிகொடி நாட்டினார். தற்போது ஆதித்த கரிகாலனாக அவர் நடித்துள்ள பொன்னியின் செல்வன் உலகெங்கிலும் வசூல் சாதனை படைத்துவருகிறது.
இந்த நிலையில் தான் திரையுலகில் அறிமுகமாகி 32 ஆண்டுகள் ஆனதையொட்டி டுவிட்டரில் ரசிகரின் வீடியோவை பகிர்ந்து, இத்தனை ஆண்டுகள். அத்தனை கனவுகள் முயற்சி திருவினையாக்கும் என்பார்கள். நீங்கள் இல்லையெனில் அது வெறும் முயற்சி மட்டுமே. இந்த 32 ஆண்டுகளுக்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.