கங்குலியை ஐசிசி தேர்தலில் பங்குபெற அனுமதிக்க வேண்டுமென பிரதமரிடம் கோரிக்கை விடுக்கிறேன் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
பிசிசிஐயில் விரைவில் நடைபெறவுள்ள தேர்தலின் மூலம் தலைவர் பதவிக்கு கர்நாடகத்தைச் சேர்ந்த முன்னாள் வீரர் ரோஜர் பின்னி (67) தேர்வாகவுள்ளார். கங்குலியின் பிசிசிஐ தலைவர் பதவிக்காலம் அடுத்த வாரத்துடன் நிறைவடைகிறது. இந்த நிலையில் பெங்கால் கிரிக்கெட் வாரியத் தலைவர் பதவிக்கு போட்டியிட உள்ளதாக செளரவ் கங்குலி தெரிவித்துள்ளார். “அக்டோபர் 22-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளேன். ஏற்கெனவே 5 ஆண்டுகள் பெங்கால் கிரிக்கெட் வாரிய பொறுப்பில் இருந்துள்ளேன். லோதா கமிட்டி விதிகளின்படி, மேலும் 4 ஆண்டுகள் பதவியில் தொடர முடியுமென” அவர் சமீபத்தில் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில். இது குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியதாவது:-
கங்குலி நமது நாட்டின் பெருமிதம். இதை இந்திய நாட்டின் குடிமக்கள் சார்பாக நான் சொல்கிறேன். அவர் பிசிசிஐ தலைவராக சிறப்பாக நிர்வகித்துள்ளார். அவரை தவறான முறையில் வெளியேற்றுவது சரியில்லை. இந்த இழப்பீட்டிற்காக அவரை ஐசிசிக்கு அனுப்ப வேண்டும். கங்குலியை ஐசிசி தேர்தலில் பங்குபெற அனுமதிக்க வேண்டுமென பிரதமரிடம் கோரிக்கை விடுக்கிறேன். அவர் அரசியல் தலைவர் கிடையாது. அதனால் இதை இதை அரசியாலாக கருதாமல் கிரிக்கெட்டுக்காக, விளையாட்டுக்காக என கருதுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.