காஷ்மீர் பண்டிட் பயங்கரவாதிகளால் சுட்டு படுகொலை செய்யப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த தேசிய மாநாடு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, ‘ஜம்மு காஷ்மீருக்கு நீதி வழங்கப்படும் வரை, அப்பாவிகளைக் குறிவைத்து பயங்கரவாதிகள் கொல்வதைத் தடுத்து நிறுத்த முடியாது’ எனத் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. அங்குள்ள சோபியானைச் சேர்ந்த புரான் கிரிஷன் பட் என்ற காஷ்மிரி பண்டிட், கடந்த 15ம் தேதி தனது பழத்தோட்டத்திற்கு சென்றுகொண்டிருந்தபோது பயங்கரவாதிகளால் சுடப்பட்டார். பலத்த காயமடைந்த அவர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இந்தத் தாக்குதலுக்கு காஷ்மீர் சுதந்திர போராட்டக்காரர்கள் என்ற தடை செய்யப்பட்ட அமைப்பு பொறுப்பேற்றது.
இந்த நிலையில் ஜம்முவில் மேற்கொள்ளப்பட்டு வரும் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாடு கட்சி தலைவருமான பரூக் அப்துல்லாவின் வீட்டில் ஆலோசனை நடத்தினார். பின்னர் பரூக் அப்துல்லா செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
காஷ்மீரில் நடைபெறும் தீவிரவாதத் தாக்குதலுக்கும், வன்முறைக்கும் 370-வது சட்டப்பிரிவுதான் காரணம் என்று மத்திய பாஜக அரசு கூறியது. அதை நீக்கிவிட்டால் காஷ்மீர் அமைதி பூங்காவாக மாறிவிடும் என்றும் மத்திய அரசு தெரிவித்தது. ஆனால், இன்று காஷ்மீரில் என்ன நடந்து கொண்டிருக்கிறது? முன்னெப்போதும் இல்லாத வகையில் வன்முறைச் சம்பவங்கள் தற்போது அதிகரித்துள்ளன. 370-வது சட்டப்பிரிவை நீக்கி 4 வருடங்கள் ஆகின்றன. பிறகு ஏன் தீவிரவாத தாக்குதலுக்கும், வன்முறைக்கும் மக்கள் பலியாகிக் கொண்டிருக்கிறார்கள். காஷ்மீரில் வன்முறைக்கு என்றுமே 370-வது சட்டப்பிரிவு காரணமாக இருந்ததில்லை. ஏனெனில், காஷ்மீரை பொறுத்தவரை வெளியில் இருந்துதான் தீவிரவாதம் ஊக்குவிக்கப்படுகிறது. என்றைக்கு காஷ்மீரில் நீதி நிலைநாட்டப்படுகிறதோ, அன்றுதான் வன்முறைக்கும், தீவிரவாத தாக்குதலுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும். இவ்வாறு பரூக் அப்துல்லா கூறினார்.