ஆறுமுகசாமி ஆணையமே அரசியலுக்காக உருவாக்கப்பட்டது தான்: டிடிவி தினகரன்!

ஆறுமுகசாமி ஆணையமே அரசியலுக்காக உருவாக்கப்பட்டது தான் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்து உள்ளார்.

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி கமிஷன் விசாரணை அறிக்கை, தமிழக சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், வி.கே.சசிகலா, சுகாதாரத் துறை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், அப்போதைய சுகாதாரத் துறை செயலாளரும், தற்போதைய கூட்டுறவுத் துறை செயலாளருமான விஜயபாஸ்கர், டாக்டர் சிவக்குமார் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், சென்னை தியாகராய நகரில் உள்ள வி.கே.சசிகலா வீட்டில், அவரை, அவரது உறவினரும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளருமான டிடிவி தினகரன், நேற்று இரவு சந்தித்துப் பேசினார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் டிடிவி தினகரன் பேசியதாவது:-

மக்களின் வரிப் பணத்தை அரசியல் காரணத்திற்காக வீணாக்குவதற்காக தொடங்கப்பட்ட ஆணையம் தான் ஆறுமுகசாமி ஆணையம். ஜெயலலிதாவின் மரணம் இயற்கையான மரணம். அது தான் உண்மை. அது தான் என்னுடைய கருத்து. ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையை இன்னும் முழுவதுமாக படிக்கவில்லை. உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி எய்ம்ஸ் மருத்துவ அலுவலர் கொடுத்த கருத்துக்களை ஆணையம் நிராகரித்துள்ளது. இது மிகவும் ஆச்சரியமான விஷயமாக இருக்கிறது.

அப்பல்லோ தமிழகத்திற்கு பெருமை சேர்க்கிற மருத்துவமனை. அந்த மருத்துவமனை மேலேயும் குற்றச்சாட்டை வைத்துள்ளது. அரசியல் காரணங்களுக்காக சசிகலாவையும், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரையும் குற்றம் சாட்டினாலும், ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் அதிகாரி நேர்மையானவர். சிறப்பாக செயல்படக்கூடியவர். அவரையே இந்த ஆணையம் குற்றம் சாட்டி இருக்கிறது. ஜெயலலிதா இறப்புக்குப் பிறகு இவ்வாறான பிரசாரத்தை கிளப்பியதே திமுக தான். அன்று ஓபிஎஸ் பதவியில் இல்லாத காரணத்தால் அவரும் பிரசாரத்தை கையில் எடுத்தார். தூத்துக்குடியில் துப்பாக்கி சுட்டின் போது மக்களின் உயிரை காக்கா குருவி போல் சுட்ட ஆணையத்தின் அறிக்கையை ஊடகங்கள் பெரிதாக்காமல் இருக்கின்றனர்.

2011 டிசம்பர் 11 என்னை கட்சியிலிருந்து அம்மா நீக்கி விட்டார். செப்டம்பர் 25, 2016 தான் பின்னர் அம்மாவை நேரில் சென்று பார்த்தேன். அதற்கு இடையில் போயஸ் கார்டன் பக்கம் கூட செல்லவில்லை. தீபாவளி, பொங்கல் நேரத்தில் சசிகலாவை சந்திப்பது வழக்கம். நாளைக்கு ஊருக்கு செல்ல இருப்பதால் அவருக்கு புத்தாடை வழங்கி விட்டு செல்ல வந்தேன்.

அப்பல்லோ மருத்துவமனையில் அவ்வளவு மருத்துவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மறைக்கவா போகிறார்கள். ஜெயலலிதாவிற்கு தீவிர நெஞ்சு வலி ஏற்பட்டது. எக்மோ கருவி பொருத்தப்பட்டதால் 72 மணி வரை நேரம் பார்க்கலாம் என மருத்துவர்கள் பேசிக் கொண்டார்கள். அதை தான் நான் கேட்டேன். சசிகலா, முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் மற்றும் ஐஏஎஸ் அதிகாரி ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் சட்ட ரீதியாக எதிர்கொள்வர்.

ஆறுமுகசாமி ஆணையமே அரசியலுக்காக உருவாக்கப்பட்டது தான். பின்னர் அரசியல் இல்லாமல் எப்படி இருக்கும். எடப்பாடி பழனிசாமி கவனத்திற்கு கொண்டு சென்றே தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்றது. ஆனால் டிவியில் பார்த்து தெரிந்து கொள்வதாக சும்மா சமாளிக்கிறார். ஸ்மார்ட் சிட்டி திட்டம் தொடர்பாக டேவிதார் ஐஏஎஸ் அறிக்கை தொடர்பாக அரசு மூச்சே விடவில்லை. குற்றம் சாட்டப்பட்டவர்கள் யாரும் பின்வாங்க மாட்டார்கள். தவறு செய்யவில்லை என மக்களுக்கு தெரியும்.

அண்ணன் எடப்பாடிக்கு பயத்தினால் என்ன செய்வது என்று தெரியவில்லை. சபாநாயகரின் அதிகாரத்தில் நாம் முடிவு செய்ய முடியாது. மக்கள் பிரச்னையை விட்டு விட்டு தங்களைக் காப்பாற்றிக் கொள்ள உண்ணாவிரதம் செய்வது அரசியல்வாதியாக எனக்கு வருத்தமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.